

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் நேற்று மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கத்தைச் சேர்ந்த காமாட்சி(28), பிரசவத்துக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது கணவர் மூர்த்தி, மகன் சக்திவேல்(4), மூர்த்தியின் அண்ணி குள்ளம்மாள், அவரது மகள் சவுந்தர்யா(7) ஆகியோர் காமாட்சிக்கு உதவியாக இருந்தனர்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவர்களிடம் பழகியுள்ளார். பின்னர், உணவு, சாக்லெட் வாங்கிக் கொடுத்து, சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரைக் கடத்திச் சென்றார். இது தொடர்பாக விஷ்ணு காஞ்சிபோலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், குழந்தைகளை கடத்தியது வாலாஜாபாத் அடுத்த அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அஞ்சூரில் இருந்த குழந்தைகளை மீட்ட போலீஸார், லட்சுமிக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர்வெங்கேடசனைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகிவிட்ட லட்சுமியைத் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யாவை, அவர்களது பெற்றோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேற்று ஒப்படைத்தார். மேலும், துரிதமாகச் செயல்பட்டு குழந்தைகளை மீட்ட போலீஸாரை அவர் பாராட்டினார்.