

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாயமான இரண்டு குழந்தைகளை போலீஸார் வாலாஜாபாத் அருகே மீட்டனர். குழந்தைகளைக் கடத்திய பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணுகாஞ்சி (பி2) காவல் நிலைய எல்லையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று, 7 வயது பெண் குழந்தை, 3 வயது ஆண் குழந்தை ஆகிய இருவர் கடத்தப்பட்டனர். காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவர்களைக் கடத்திச் சென்றார். கடத்தலுக்கு முன்னர் அப்பெண் குழந்தைகளிடம் நேசமாகப் பேசியுள்ளார். குழந்தைகளின் பெற்றோரிடம் நல்லவர் போல் நடித்துள்ளார்.பின்னர் இரு குழந்தைகளையும் அவர் கடத்திச் சென்றுள்ளார்.
இந்த குற்றச் சம்பவத்தில் இருந்து காணாமல் போன இரு குழந்தைகளையும் மீட்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துரிதமான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள் இருவரும், நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, வாலாஜாபாத் அருகே அச்சூர் கிராமத்தில் இரண்டு குழந்தைகளும் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு அச்சூர் கிராமத்துக்கு சென்று, இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டது.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து இரு குழந்தைகளையும் கடத்திய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது அச்சூரைச் சேர்ந்த லட்சுமி என்பது போலீஸாருக்கு தெரியவந்ததுள்ளது. இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். லட்சுமியைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.