

மதுரை: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாகச் சென்று கன்டெய்னர் லாரியில் மோதிய விபத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரன்குடி அருகிலுள்ள செங்கன்குழிவில்லையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜேம்ஸ் மார்டின் (34). இவர் வெளிநாட்டிலுள்ள துறைமுகத்தில் பணிபுரிந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளார். இவரது தம்பி ஜாம்டேவிட்சன் (30). இவர்களின் உறவினர் கமலேஷ் (54). வேலைக்கென சென்னையில் கூடுதல் படிப்பு ஒன்றில் தம்பி ஜாம்டேவிட்சனை சேர்க்க, மார்ட்டின் திட்டமிட்டார். இதற்காக நேற்று மூவரும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
காரை ஜேம்ஸ் மார்ட்டின் ஓட்டினார். மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மைட்டான்பட்டி - நல்லமநாயக்கன்பட்டி இடையில் கருப்பட்டி காபி கடை அருகே அதிகாலை 1.30 மணிக்கு சென்றபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்தது. இதைத்தொடர்ந்து தாறு மாறாக ஓடிய கார் சாலையின் மையப்பகுதியை கடந்து சுமார் 10 மீட்டர் தூரம் சென்று உயரத்தில் பறந்துள்ளது. அப்போது, மதுரை- விருதுநகர் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரியின் முன்பகுதியில் வேகமாக மோதியது. கார் சுக்கு நூறாக நொறுங்கியது. கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் ஜேம்ஸ் மார்ட்டின், அவரது தம்பி ஜாம்டேவிட்சன், உறவினர் கமலேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிந்தனர். மேலும், கன்டெய்னர் லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், விராதனூரைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன் செல்வக்குமாரும் (29) உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீஸார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் கார் மற்றும் லாரிக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், சம்பவ இடத்தை டிஎஸ்பிக்கள் வசந்தக்குமார், இலக்கியா, காவல் ஆய்வாளர் லட்சுமிலதா, கஞ்சனா உள்ளிட்டோரும் பார்வையிட்டனர். அண்ணன், தம்பி, உறவினர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அதிகாலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவர்களது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.