

மதுரை: மதுரை அருகே இரு தரப்பினருக்குள் நடந்த மோதல் எதிரொலியாக வீடு, டீக்கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், கொந்தகை அருகிலுள்ள கட்டமன்கோட்டையைச் சேர்ந்தவர் மகாமுனி. இவரது மகன் சவுந்திரபாண்டியன். இவர் நெடுங்குளம் மெயின்ரோடு சத்யாநகரில் டீக்கடை நடத்துகிறார். கடந்த 18-ம் தேதி சவுந்திரபாண்டியனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் பொதுப் பாதை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் அதே ஊரைச் சேர்ந்த சப்பாணி என்பவர் காயமடைந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணிக்கு சப்பாணி வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சவுந்திரன் டீக் கடையின் முன்பாகவும் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
இது பற்றி தகவல் அறிந்த சிலைமான் போலீஸார் சம்பவத்திற்கு சென்று விசாரித்தனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கட்டமன் கோட்டை கிழக்கு தெரு மனோகரன் மகன் மாதவன் (20), மூர்த்தி மகன் பிரசன்னா (25) ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நடந்த மோதல் எதிரொலியாக இது நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.