

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே மதுபானக் கடையில் அரிவாளை காட்டி ஊழியர்களை மிரட்டி ரூ.1.53 லட்சத்தை முகமூடி அணிந்த 3 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.
அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு சுமார் ரூ 1.70 லட்சம் அளவுக்கு மது விற்பனை நடக்கிறது. இக்கடையில் சொக்கலிங் கபுரத்தைச் சேர்ந்த முருகன் (53) மேற்பார்வையாளராகவும், மருது பாண்டியன் விற்பனையாளராகவும் பணியாற்றுகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு இருவரும் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது முதல் 22 வயதுடைய 3 பேர் முக மூடி அணிந்து கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்தனர். அங்கிருந்த முருகனையும், மருது பாண்டியனையும் அரிவாளைக் காட்டி மிரட்டி கடையிலிருந்த ரூ.1.53 லட்சத்தை கொள்ளைடித்து விட்டு பைக்கில் தப்பினர்.
தகவல் அறிந்த விருதுநகர் எஸ்பி ஸ்ரீனிவாசபெருமாள் டாஸ்மாக் கடைக்குச் சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக அருப்புக் கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.