

திருப்பூர்: திருப்பூர் அருகே கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமிக்கு மாத்திரை வழங்கிய மருந்தகத்துக்கு அதிகாரிகள் ‘சீல் ’ வைத்தனர்.
திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டதால், சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரின்பேரில் சிறுமியின் பெற்றோரிடம் வீரபாண்டி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது , சிறுமி கர்ப்பமாக இருந்ததாகவும், கருவை கலைக்க கோவில் வழி - முத்தணம்பாளையம் சாலையில் உள்ள மருந்தகத்தில் ரூ.1000-க்கு மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
போலீஸார் அளித்த தகவலின்பேரில், துணை இயக்குநர் (குடும்ப நலம்) கவுரி, மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன், தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, இணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபால கிருஷ்ணன், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராமசாமி ஆகியோர் தொடர்புடைய மருந்தகத்தில் ஆய்வு நடத்தினர்.
அந்த மருந்தகத்தை அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (40), இவரது மனைவி கவிதா (35) ஆகியோர் நடத்தி வந்ததும், செட்டிபாளையத்திலும் இவர்கள் மருந்தகம் நடத்தி வருவதும் தெரியவந்தது. அங்கு ஆய்வு செய்த போது, காலாவதியான மருந்துகள், மாதிரி மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மருந்தகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.