Published : 28 Jun 2023 06:41 AM
Last Updated : 28 Jun 2023 06:41 AM
அனகாபுத்தூர்: பல்லாவரம் அருகே அனகாபுத்துாரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக சென்ற ரெடிமிக்ஸ் கலவை லாரியை மடக்கி ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்ட தாம்பரம் மாநகராட்சி, திமுக பெண் கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம் மாநகராட்சி, முதலாவது மண்டலம், அனகாபுத்துார், காமாஜர் நகர், இ.பி. காலனியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் ரூ.48.90 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இப்பணியில் ஈடுபடும் ரெடிமிக்ஸ் லாரிகள் அனகாபுத்தூர் பக்தவச்சலம் தெரு வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு, தாம்பரம் மாநகராட்சி, 4-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சித்ராவின் கணவர் தமிழ்குமரன் (35) தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் பணிக்காக சென்ற கலவை லாரியை மடக்கி தகராறு செய்ததோடு ஒப்பந்ததாரரை மிரட்டி பணம் கேட்டதாகவும், தகாத வார்த்தைகளைப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் கடந்த சில மாதங்களாகவே இவர் அந்த நிறுவனத்துக்கு பல வகையில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தன. நேற்று முன் தினமும் பிரச்சினை ஏற்பட்டது. இப்பிரச்சினை மாநகராட்சி உயர் அதிகாரிகள் கவனத்துக்கு சென்றது. பின்னர் இது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் மேலாளர் கண்ணன் என்பவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தமிழ் குமரனை நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர், பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT