ரூ.73.5 லட்சம் மோசடி | ‘நியோ மேக்ஸ்’ இயக்குநர், முகவர்களின் இடங்களில் மதுரை தனிப்படை தீவிர சோதனை

ரூ.73.5 லட்சம் மோசடி | ‘நியோ மேக்ஸ்’ இயக்குநர், முகவர்களின் இடங்களில் மதுரை தனிப்படை தீவிர சோதனை
Updated on
1 min read

மதுரை: ரூ.73.50 லட்சம் ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக ‘நியோ மேக்ஸ்’ நிறுவன இயக்குநர்கள், முகவர்கள் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தென்மாவட்டத்தில் விருதுநகரை மையமாக கொண்டு ரியல் எஸ்டேட் உட்பட தொழில்களை செய்யும் தனியார் நிறுவனமான ‘நியோ மேக்ஸ்’ பொது மக்களிடம் முதலீடுகளை பெற்றன. இதன்மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் தருவதாக கூறி முதலீடுகளை ஈர்த்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசங்கரீஸ்வரன். தற்போது சென்னையில் வசிக்கிறார். சில மாதத்துக்கு முன்பு ‘நியோ மேக்ஸ்’ மற்றும் அதன் துணை நிறுவனங்களின் முகவர்கள் செல்லம்மாள், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் அவரை அணுகினர். முதலீடு தொடர்பாக பேசி, அவரை மதுரை எஸ்எஸ். காலனியிலுள்ள அந்த நிறுவன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், சுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் முதலீடு குறித்து ஜெயசங்கரீஸ்வரனிடம் பேசியுள்ளனர்.

முதலீடு தொகைக்கு 12 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாகவும், 3 ஆண்டுக்கு மேல் முதலீடு தொகை இரட்டிப்பாக கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதை நம்பி ஜெயசங்கரீஸ்வரன் ரூ.73. 50 லட்சத்தை ‘நியோ மேக்ஸ்’ மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். இருப்பினும், முதலீடு தொகைக்கான வட்டி விகிதம் பிரப்ரவரி முதல் கொடுக்கவில்லை. அசல் தொகையைக் கேட்டு நிறுவனத்துக்கு சென்றபோது, எவ்வித பதிலும் இல்லை. முகவர்களும், நிறுவனமும் முறையாக பதிலளிக்கவில்லை.

இது தொடர்பாக அவர், மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களில் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி மற்றும் முகவர்கள் நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் மற்றும் ‘நியோ மேக்ஸ்’ உட்பட அதன் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களிலுள்ள அந்த நிறுவனங்களுக்குரிய அலுவலகம், முகவர்கள், இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 11-க்கும் மேற்பட்ட இடங்களில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குப்புசாமி தலைமையில் ஆய்வாளர்கள் இளவேணி, மலர்விழி, ராஜா நலாயினி, கமர் நிஷா உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை கைப்பற்றியதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in