ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேர் கைது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on: 
1 min read

சென்னை: போலி ஆவணம் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர் சுதா மற்றும் நசீரா பாத்திமா. இவர்கள் இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ரூ.60 லட்சம் மதிப்பிலான காலி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் சிலர் அபகரித்துவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மகேஷ்வரி மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இதில், போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, நில அபகரிப்பு மற்றும் ஆள் மாறாட்டம் செய்ததாக திருவொற்றியூரைச் சேர்ந்த அமுதா என்ற அமுத லட்சுமி (51), கத்திவாக்கத்தைச் சேர்ந்த கணேசன் (40), புதுவண்ணாரப்பேட்டை மன்சூர் அகமது (32), அதேபகுதி இர்பான் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அபகரிக்கப்பட்ட காலி மனை மீட்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in