மும்பை கொடூரம் | லிவ் இன் இணையை கொலை செய்து உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்த நபர் கைது

மும்பை கொடூரம் | லிவ் இன் இணையை கொலை செய்து உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்த நபர் கைது
Updated on
1 min read

மும்பை: மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடன் இணைந்து வாழ்ந்த அஃப்தாப் பூனாவாலா என்ற இளைஞர் படுகொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய சம்பவம் கடந்த மே மாதம் அம்பலமானது. நாட்டையே அந்தச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில்தான் மும்பையில் அதைவிடவும் பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த வீட்டில் மனோஜ் சஹானி என்ற 56 வயது நபர் வசித்து வந்தார். அவருடன் சரஸ்வதி வைத்யா என்ற 36 வயது பெண் வாழ்ந்து வந்தார். கீதா நகர் ஃபேஸ் 7ல் கீதா ஆகாஷ் தீப் கட்டிடத்தில் அவர்கள் வீடு இருந்தது. ஃப்ளாட் எண் 704ல் அவர்கள் இருவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் அந்த ஃப்ளாட்டிற்கு வந்தனர். வீட்டை சோதனை செய்தபோது அங்கே அழுகிய நிலையில் உடல் பாகங்கள் இருந்தன.

இது தொடர்பாக மனோஜ் சஹானி உள்பட இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து துணை ஆணையர் ஜெயந்த் பாஜ்பாலே கூறுகையில், "மனோஜ் சஹானி, சரஸ்வதி யாதவ் ஆகிய இருவரும் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை மர அறுவை இயந்திரம் கொண்டு இரண்டாகத் துண்டித்துள்ளனர். பின்னர் உடலை சிறு பாகங்களாக வெட்டி அதனை குக்கரில் கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்துள்ளனர். இந்தக் கொடூர கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது. கொலைக்கான பின்னணியும் ஒருவர் தான் செய்தாரா இல்லை வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in