

இத்தாலியில் கரோனா வைரஸின் தீவிரம் அதிகமாக உள்ளதால் நாடு முழுவதும் மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் கோவிட் - 19 காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 463 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 70க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளனர். இதுவரை 724 பேர் கோவிட்-19 காய்ச்சலிலிருந்து விடுபட்டுள்ளனர். 9000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி ஊடகங்கள், “இத்தாலியில் பயணங்கள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் மூன்று வாரங்களுக்கு திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் 6 மணிக்கு மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாலி பிரதமர் காண்டே, பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.