அமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ்
அமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 216 ஆக அதிகரித்துள்ளது. 16,600 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை அதிபர் பென்ஸின் செய்தி செயலாளர் கேத்தி மில்லர் கூறும்போது, ''துணை அதிபரின் அலுவலக ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், துணை அதிபர் பென்ஸும் சம்பந்தப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இல்லை. எனினும் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
துணை அதிபர் பென்ஸ், அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
முன்னதாக பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோவுடன் அவரது தகவல் தொடர்பு செயலாளர் பாபியோ வாஜ்கார்டனும் கடந்த 7-ம் தேதி அமெரிக்கா சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து பாபியோ கரோனாவால் பாதிக்கப்பட்டார்.
பாபியோ ட்ரம்ப்பிடம் நேரில் பேசியதை அடுத்து, அமெரிக்க அதிபருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ட்ரம்ப்புக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
