

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் 22-ம் தேதி புதுச்சேரி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி நேற்று (மார்ச் 19) இரவு 9 மணி முதல் நேரடியாகச் சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.
முதலாவதாக, நகரின் மையப்பகுதியில் உள்ள மளிகை கடைக்குச் சென்ற முதல்வர், அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடத்தில் கரோனா குறித்து பயப்பட வேண்டாம் எனவும் கடைகள் எதுவும் மூடப்படாது எனவும் கூறினார்.
இதனையடுத்து, பேருந்து நிலையம், கோரிமேடு மற்றும் கனகசெட்டிகுளம் உள்ளிட்ட புதுச்சேரி எல்லைப் பகுதிக்குச் சென்ற அவர், வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "பிரதமர் மோடி கூறியபடி புதுச்சேரியில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் 22-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் கரோனா முன்னெச்சரிக்கைக்காக 17.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முகக் கவசம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.