

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக 2-வது பாசிட்டிவ் உள்ள நபர் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆம்பூரைச் சேர்ந்ததாக கூறப்படும் 20 வயது இளைஞர் முடி திருத்தும் தொழில் செய்து வந்த நிலையில் அவர் வேலை வாய்ப்புக்காக நண்பர்கள் அழைத்ததன் பேரில் டெல்லிக்கு கடந்த மாதம் சென்றார்.
இந்த மாதம் முதல் வாரத்தில் அவருக்கு உடல் நலம் பாதிக்கவே அவர் அங்கு தங்கியிருந்த நண்பர்களிடம் சொல்லிவிட்டு ரயில் மூலம் மார்ச் 10-ம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு 12-ம் தேதி சென்னை வந்தார். நோய்த்தொற்றுடன் சென்னையில் உள்ள தனது நண்பர்கள் அறைக்குச் சென்று தங்கியிருந்துள்ளார்.
நோயின் தாக்கம் அதிகம் இருந்ததால் 16-ம் தேதி பொது சுகாதாரத்துறைக்குக் கிடைத்த தகவலின்பேரில் அவரை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர்.
தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவரின் ரத்த, சளி மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் அவர் டெல்லியில் தங்கியிருந்த அறைத் தோழர்கள், 12-ம் தேதி வரை ரயிலில் பயணித்தவர்கள், சென்னையில் அறையில் தங்கியிருந்தவர்கள், அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் உள்ளிட்டவர்களைக் கண்காணிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும் இளைஞர் சென்னை அரும்பாக்கத்தில் தங்கியிருந்த பகுதியில் அவருடன் தங்கியிருந்தவர்கள் மற்றும் பக்கத்து அறையில் இருந்தவர்கள் என 8 பேர் பொது சுகாதாரத் துறையினரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதாரத்துறை மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.