Published : 19 Mar 2020 07:25 am

Updated : 19 Mar 2020 07:26 am

 

Published : 19 Mar 2020 07:25 AM
Last Updated : 19 Mar 2020 07:26 AM

கரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமா?

covid-19-virus

த.வி.வெங்கடேஸ்வரன்

சீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கரோனா வைரஸ் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.

அமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற நிறுவனத்தை (Scripps Research Institute) சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவானது புகழ்பெற்ற ‘நேச்சர் மெடிஸன்’ ஆய்விதழில் நேற்று (March 17, 2020) வெளியாகியுள்ளது.

SARS-CoV-2 என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது மரபணுமாற்றம் செய்யப்பட்டோ உருவாகவில்லை என்றும் இயற்கையில் பரிணமித்த புதிய இனப்பிரிவு என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் SARS-CoV-2 இனப்பிரிவைச் சேர்ந்த கரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியது.

அப்போது முதல் 2020-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 110 நாடுகளில் குறைந்தபட்சம் 1,21,564 நபர்களிடம் இந்த நாசகார கிருமி பரவி சுமார் 4,373 மனித உயிர்களை குடித்துள்ளது.

வூஹான் நகரில் வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளதால் கரோனா வைரஸ் அங்கே ரகசியமாக தயாரிக்கப்பட்ட செயற்கை கிருமி என்ற புரளி எழுந்தது.

"ஏற்கெனவே நாம் அறிந்துள்ள வேறு கரோனா வைரஸ் இனப்பிரிவுகளின் மரபணு தொடரோடு புதிய இனப்பிரிவை ஒப்பிட்டு பார்க்கும்போது SARS-CoV-2 இனப்பிரிவு வைரஸ் இயற்கையில் பரிணமித்த ஒன்று என தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கிரீடம் அணிந்த வைரஸ்

பூனைக் குடும்பத்தில் பூனை, புலி என பல விலங்குகள் உள்ளதுபோல இந்த கரோனா வைரஸ் குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.

நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது கிரீடம் (கிரவுன்) போல அல்லது சூரியனை சுற்றி இருக்கும் ஒளிக் கதிர்கள் (கரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் கரோனா வைரஸ் குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது.

நமக்கு தெரிந்த வரையில், மனிதர்களை தாக்கும் ஆறு கரோனா வைரஸ்களில் 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் ஆபத்து அற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். MERS-CoV மற்றும் SARS-CoV ஆகிய இரண்டும் கிருமி தாக்கியவர்களில் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு நோயை ஏற்படுத்தும்.

ஏழாவதாக உருவானதுதான் இந்த SARS-CoV-2. எனவேதான், புத்தம் புதிதாக சமகாலத்தில் பரிணமித்த இனப்பிரிவு என பொருள்படும் 'நாவல்' என்ற அடைமொழியோடு 'நாவல் கரோனா வைரஸ்' என பெயர் சூட்டப்பட்டது. இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்தான் கோவிட்-19.

பூட்டும் வைரஸ்களின் கள்ளசாவியும்

ஓம்புயிரிகளின் செல்களில் புகுந்து அந்த உயிரியின் செல் அமைப்பை பயன்படுத்திதான் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே எப்படியாவது ஓம்புயிரி செல்களுக்குள் செல்ல வைரஸ் துடிக்கும்.

ஓம்புயிரிகளின் செல்கள் தங்கள் கதவை திறந்து வைத்து வா வா என்று வைரஸ்களை அழைக்காது. செல் சுவர் கொண்டு வைரஸ்களை உள்ளே எளிதில் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தும்.

ஆனால் கதவு பூட்டிய கோட்டை போல எல்லா நேரமும் செல்கள் இருந்துவிட முடியாது. செல்பிரிதல், செல் செயல்படுதல் போன்ற எல்லா இயக்கத்துக்கும் ஆற்றல் தேவை. பற்பல புரத பொருள்கள் தேவை. ரத்தம் எடுத்துவரும் புரத பொருள்கள், ஆக்ஸிஜன் போன்ற பொருள்கள் செல்களுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்ல வேண்டும். உள்ளே ஏற்படும் வேதி வினை காரணமாக உருவாகும் மாசுகளை அப்புறப்படுத்த வேண்டும். எனவே, செல்களின் சுவர்களில் கதவு போன்ற அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது மட்டும் கதவு திறந்து வெளியே உள்ள பொருள் உள்ளே வரும், உள்ளே உற்பத்தியாகும் மாசுகள் வெளியேற்றப்படும்.

சரியான புரதப்பொருள்கள் வந்து சேரும்போது, அவற்றை செல்களின் சுவர்களில் பற்றி பொறுத்துவதற்காக கைப்பிடி போன்ற ஏற்பிகள் இருக்கும். அந்த புரதங்களின் ஒரு பகுதி சாவியின் வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள கதவு பூட்டின் உள்ளே இந்த சாவி வடிவம் நுழையும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும்.

பூட்டை உடைத்து திருடன் நுழைவது போல கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து வைரஸ்கள் உள்ளே நுழையும். ஒவ்வொரு பூட்டின் சாவியும் வெவ்வேறு வடிவில் இருக்கும் அல்லவா?

அதுபோல ஒவ்வொரு உயிரியின் பூட்டும் கைப்பிடியும் வெவ்வேறு வடிவில் இருக்கும். இதனால்தான், எல்லா வைரஸ்களும் எல்லா உயிரிகளின் செல்களிலும் புகுந்துவிட முடிவதில்லை. இதன் காரணமாகவே, மாட்டுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள், பல சமயம் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை.

அதாவது ஒவ்வொரு வைரஸுக்கும் அதற்கு ஏற்ற ஓம்புயிரிகள் உள்ளன. தனது ஓம்புயிரி செல்களை பற்றி, துளையிட்டு புகுந்து செல்வதற்காக அந்த குறிப்பிட்ட வைரஸ்களுக்கும் அதன் மேலுறையில் செல்களின் ஏற்பிகளை பற்றி பிடிக்கும் RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவை திறக்கும் சாவி போன்ற அமைப்பு, புரதம் போன்ற சிறப்பு அமைப்புகள் இருக்கும்.

மரபணு தொடர் வரிசை

தொற்றுநோய் பரவல் ஏற்பட சில நாட்களிலேயே சீன விஞ்ஞானிகள் SARS-CoV-2 வைரஸின் மரபணு தொடரை வரிசை செய்து அனைத்து ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் பொதுவெளியில் வெளியிட்டனர். ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், முதலில் ஒரே ஒரு மனிதருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதன் பின்னர் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவிதான் சீனாவில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது என்பது விளங்கியது.

ஏறக்குறைய பந்து வடிவில் இருக்கும் கரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கூர் முனைகள் உள்ளன. இந்த கூர் முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை இந்த வைரஸ் பற்றிக் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைகிறது.

ஆண்டர்சன் மற்றும் அவரது சகப் பணியாளர்கள் SARS-CoV-2 மரபணு தொடரை ஆராய்ந்தபோது, இந்த வகை வைரஸ்களின் கூர் முனைகளில் மனித செல்களின் மீது உள்ள ACE2 என்ற ஏற்பியை பற்றிக்கொள்ளும் விதத்தில் 'ஏற்பி பற்று' புரதம் பரிணமித்துள்ளது என கண்டறிந்தனர். அதாவது ACE2 என்ற பூட்டை திறக்கும் சரியான சாவி SARS-CoV-2-டம் இருந்தது.

ஒப்பீடு ஆய்வு

இந்த சாவியை ஏனைய SARS-CoV வைரஸ்களின் சாவியோடு ஒப்பிட்டு பார்த்தனர். புதிதாக உருவான SARS-CoV-2-ன் சாவி புரதம் ஏற்கெனவே SARS-CoV வைரஸ்களிடம் இருந்த சாவி புரதத்தைவிட ஆற்றல் குறைந்தது. செயற்கையாக உயிரியல் ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் மேலும் ஆற்றல் கூடிய பற்று புரதத்தை தான் உருவாக்குவார்கள்; ஆற்றல் குறைவான ஒன்றை அல்ல.

ஒருவேளை, செயற்கை SARS-CoV வைரஸை கிருமி யுத்தத்துக்கு தயார் செய்தால், அது ஏற்கனவே மனிதர்களை கொல்லும் மிகவும் கொடிய வகை வைரஸை அடிப்படையாக கொண்டு தான் அமைய வேண்டும். SARS-CoV-2-ன் அடிப்படை அமைப்பு ஏற்கெனவே மனிதரை தாக்கும் SARS-CoV வைரஸ்கள் போல இல்லாமல் அழுங்கு மற்றும் வவ்வால்களை தாக்கும் SARS-CoV வைரஸ்கள் போல அமைந்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கூர் கத்தியை மழுங்கடித்து போர் தளவாடங்களை தயார் செய்ய மாட்டார்கள் அல்லவா? அதன்படி பார்த்தால், SARS-CoV வைரஸ்களின் வீரியம் கூட இந்த நாவல் SARS-CoV-2 வைரஸுக்கு இல்லை.

“SARS-CoV-2 கூர்முனையின் RBD பற்று புரதம் மற்றும் வைரஸின் அடிப்படை மூலக்கூறு வடிவம் இரண்டையும் சேர்த்து பார்க்கும்போது, செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கிய கிருமியாக இருக்க முடியாது என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

எப்படி உருவானது?

இரண்டு வகையில் இந்த நாவல் SARS-CoV-2 வைரஸ் பரிணமித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலாவதாக, வேறு விலங்குகளில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் உருவாகி, பின்னர் மனிதர்களிடம் நோய் ஏற்படுத்தும் கிருமியாக பரிணமித்து பரவியிருக்கக் கூடும். இல்லையெனில், முதலில் நோயற்ற வடிவில் மனிதரிடம் பரவி, பின்னர் மனிதரிடம் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் கிருமியாக உருவாகியிருக்கலாம்.

வவ்வால்களிடம் பரவும் SARS-CoV-2 வைரஸின் சாயல் இந்த கரோனா வைரஸில் காணப்படுகிறது. எனவே, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. SARS மற்றும் MERS வகை SARS-CoV கரோனா வைரஸ்கள் இப்படி தான் முதலில் புனுகு பூனை மற்றும் ஒட்டகங்களில் முறையே உருவாகி பின்னர் மனிதரிடம் பரவியது.

எனினும், வவ்வால்களிடம் நோய் ஏற்படுத்தும் அதே இனம், மனிதரிடம் நோய் ஏற்படுத்த முடியாது. எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட இனப்பிரிவு பரிணமித்து இருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட இனப்பிரிவு இனம் காணப்படவில்லை. எனவே, வவ்வால்களிடம் உருவாகி மனிதனுக்கு இது பரவியது என தீர்மானமாக கூற முடியாது.

மாற்றாக நோய்விளைவிக்கின்ற திறன் அற்ற வகை வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் காலப் போக்கில் பரிணாமத்தின் காரணமாக, நோய் விளைவிக்கின்ற தன்மை கொண்ட இனப்பிரிவாக உருவெடுத்து இருக்கலாம். அழுங்கு எறும்புண்ணிகளில் இந்த சாயல் கொண்ட வைரஸ் உள்ளது. அந்த விலங்கிடம் காணப்பட்ட வைரஸ்களிலும், SARS-CoV-2 வைரஸ்களிலும் ஒரே வகை RBD அமைப்புதான் உள்ளது.

எனவே நேரடியாக எறும்புண்ணியிடமிருந்தோ அல்லது பூனை இன விலங்குகளிடம் இருந்தோ இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவி இருக்கலாம். மனிதர்களிடம் பரவிய பின்னர், பரிணாம படிநிலை வளர்ச்சியில் மனித செல்களை துளைத்து திறக்கும் 'சாவி புரதம்' பரிணமித்து தொற்றுநோயாக உருவா கியிருக்கலாம் என்கிறார்கள்.

இரண்டில் எது சரி என்பதை இப்போது நம்மிடம் உள்ள தரவுகளைக் கொண்டு இறுதி செய்ய முடியாது. தொற்று விளைவிக்க கூடிய திறனோடுவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றால் மறுபடி இந்த வைரஸின் வேறு ஒரு வடிவம் எதிர்காலத்தில் பரவி புதிய தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நோய் ஏற்படுத்தும் திறனற்ற வடிவில் மனிதர்களிடம் பரவி பின்னர், நோய் தன்மை கொண்ட வைரஸ் பரிணமித்துள்ளது என்றால் மறுபடியும் அதேபோன்ற நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. எப்படி இந்த வைரஸ் உருவானது என்பதை கூடுதல் ஆய்வுதான் நமக்கு தெளிவுப்படுத்தும்.

- கட்டுரையாளர்

மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி.

தொடர்புக்கு: tvv123@gmail.com


Covid 19 virusகரோனா வைரஸ்கரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாScripps Research Institute

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author