Published : 13 Mar 2020 19:14 pm

Updated : 13 Mar 2020 19:25 pm

 

Published : 13 Mar 2020 07:14 PM
Last Updated : 13 Mar 2020 07:25 PM

கோவிட்-19 காய்ச்சல்; காரைக்கால் சனீஸ்வரன் கோயில் குளத்தில் குளிக்க பக்தர்களுக்குத் தடை; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

cowitt-19-fever-ban-on-pilgrims-bathing-in-karaikal-saneeswaran-temple-pond-puducherry-chief-minister-narayanasamy

புதுச்சேரி 

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் புதுச்சேரியில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் கூட பாதிப்பில்லை என்றும், இந்த வைரஸ் காய்ச்சலால் காரைக்கால் சனீஸ்வரன் கோயில் நலத்தீர்த்த குளத்தில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று(மார்ச்-13) சட்டப்பேரவையில் உள்ள கேபினட் அறையில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


''புதுச்சேரி மாநிலத்தில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் வருவதைத் தடுக்கவும், அதற்குத் தேவையான மருத்துவத்தை அளிக்கவும், வைரஸ் வராமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தவும், பல துறைகளின் வாயிலாக அதை வெளிப்படுத்தவும் மருத்துவத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரியில் 83 பேர் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இவற்றில் 14 பேருக்கான முடிவு பாதிப்பு இல்லை என வந்துள்ளது. மீதியுள்ள 2 பேருக்கும் ஆய்வு முடிவு இன்று வந்துவிடும். அவர்கள் தொடர்ந்து தனி அறையில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே இதுவரை புதுச்சேரியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

அப்படியிருந்தாலும் வராமல் தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைச் செய்து வருகின்றோம். வென்டிலேட்டர், இன்சூலேட்டர், மாஸ்க் போன்ற உபகரணங்களை உடனடியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக வெளி மார்க்கெட்டில் மாஸ்க் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதனால் மத்திய அரசை அணுகி, பெற நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நோட்டீஸ் மூலம் இதுவரை 50 ஆயிரம் குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். பள்ளி குழந்தைகளுக்கு கை கழுவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், புதுச்சேரியின் எல்லைகள் வழியாகவும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள், மருத்துவர்களைக் கொண்டு பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றோம். தொலைக்காட்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.

புதுச்சேரி மருத்துவர்கள் 3 பேர், ஜிப்மர் மருத்துவர்கள் 3 பேர் டெல்லி சென்று, கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு மருத்துவம் செய்வது தொடர்பாக பயிற்சி எடுத்து வந்து, புதுச்சேரியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர். உபகரணங்கள் வாங்கத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். பொது இடங்களில் கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம்.

சீனாவில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் நோயின் தாக்கம் குறைந்தது. தற்போது ஈரான், இத்தாலியில் அதிகரித்துள்ளது. கனடாவில் பிரதமர் மனைவிக்கே வந்துள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகள் வரும்போதும், செல்லும்போதும் மருத்துவர்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படுகின்றது.

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலை பிரதமர் மோடி பேரிடர் என்று அறிவித்துள்ளார். அதுபோல் மத்திய அரசு தினமும் கூறும் அறிவுரைகளை கடைப்பிடித்து வருகின்றோம். புதுச்சேரியில் அதிர்ஷ்டவசமாக ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை. காரைக்கால் சனீஸ்வரர் கோவிலுக்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அதேசமயம் அங்குள்ள நல தீர்த்த குளத்தில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பிரே மூலம் நீரைத் தெளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். சந்தேகப்படுபவர்கள் அங்கும் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் பேருந்து, அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினிகளைத் தெளிக்கக் கூறியுள்ளோம். புதுச்சேரி அரசில் பயோ மெட்ரிக் பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் முன்கூட்டியே தேர்வுகளை முடிப்பதை முடிவு செய்ய முடியாது. பொதுஇடங்களில் அதிகமாக மக்கள் கூடுவதைத் தடுக்க வேண்டும்''.

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

தவறவிடாதீர்!


கரோனா பாதிப்புகோவிட்-19முதல்வர் நாராயணசாமிவைரஸ் காய்ச்சல்மக்கள் நடமாட்டம்நோயின் தாக்கம்கிருமி நாசினிகாரைக்கால் சனீஸ்வரன் கோயில்பக்தர்களுக்குத் தடைCorona virusCorono virus

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x