டெல்லியில் இத்தாலியர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை
டெல்லியில் இத்தாலியர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை

நாட்டில் 60 பேருக்கு கரோனா வைரஸ்: மேலும் 3 நாடுகளுக்குத் தடை; வெளிட்டிலிருந்து வந்த பயணிகள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்க மத்திய அரசு ஆலோசனை

Published on

நாட்டில் 60 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளிட்டிலிருந்து வந்த பயணிகளில் வீட்டிலிருந்தே அவர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கும்படி நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது சீனாவில் கரோனா பாதிப்பின் தாக்கம் முன்பிருந்த வேகத்தை விடக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. எனினும், உலக நாடுகளில் அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாட்டவர்களும் நுழைவதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. இன்றுவரை அவர்களுக்கு வழங்கப்பட்ட வழக்கமான மற்றும் இ-விசாக்களை நிறுத்திவைக்கவும் மத்திய குடியேற்றத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

''சமீபத்திய தகவல்கள்படி நாட்டில் புதிய கரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது,

உலக சுகாதார நிறுவனத்தின் பின்பற்றப்பட்டுள்ள தற்போதைய நெறிமுறையின்படி, உலகளவில் கோவிட் 19 தொற்றுநோய்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கைக்கு மத்தியில், இந்தியாவில் கோவிட் 19 இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் இருமுறை சோதிக்கப்படுகிறார்கள்.

டெல்லியில் உள்ள மெடந்தா மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சில கோவிட் -19 நோயாளிகளுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்றிரவு வீடியோ அழைப்பில் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்நோய் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்றாலும் குணமடைவதற்கான அறிகுறிகளையும் காட்டுவதாகக்'' கூறினார்.

டெல்லி மற்றும் ராஜஸ்தானில் இருந்து புதியதாக இரண்டு பேருக்கு இந்நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கேரளாவில் 14 பேருக்கும் உத்தரப் பிரதேசத்தில் 9 பேருக்கும் இந்நோய் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சீனா, ஹாங்காங், கொரியா குடியரசு, ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயண வரலாற்றைக் கொண்ட பயணிகள் தங்களைத் தாங்களே சுயமாக விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் அவர்கள் நாட்டுத் திரும்பிய நாளிலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் அத்தகைய ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அவர்களின் நிறுவன முதலாளிகள் வசதிசெய்து தர முன்வரவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in