

ஜப்பான் நாட்டில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குத் திரும்பிய தம்பதிக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.
சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 104 நாடுகளில் கோவிட்-19 வைரஸ் (கரோனா) பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 43 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜப்பான் நாட்டில் வேலை செய்து வந்த தம்பதியர் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்கு நேற்று திரும்பினர்.
அவர்கள் வயிறு எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் கோவிட்-19 வைரஸுக்கான அறிகுறிகள் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவத்திடம் கேட்டபோது, ''ஜப்பான் நாட்டில் இருந்து கிருஷ்ணகிரிக்கு ஒரு தம்பதியர் வந்தனர். இதில் ஆணுக்கு வயிறு எரிச்சல் இருந்ததால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணவன் - மனைவி 2 பேருடைய ரத்த மாதிரியும் சோதனை செய்யப்பட்டது.
இதில் கோவிட் -19 அறிகுறிகள் இல்லை. ஆனாலும், அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து ஒரு மாதம் அவர்களின் வீட்டிற்கு மருத்துவக் குழுவினர் சென்று அவர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க உள்ளோம்'' என்றார்.