

கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை
Barakah Meets Barakah - 2016 | Mahmoud Sabbagh |Saudi Arabia
காதல், இதனைப் பேசாத பாடாத வரையாத எழுதாத கலைஞர்கள் இல்லவே இல்லை என்று சொல்லலாம். எல்லாவித கலைகளிலும் காதல் நிச்சயமாக மையப்புள்ளியாய் ஒருமுறையேனும் இருக்கும். அந்த காதலுக்காக படும் அவஸ்தைகளும் காதலினால் ஏற்படும் பிரச்சினைகளையும் பேசாத திரைப்படங்கள் இல்லை. 'டைட்டானிக்' தொடங்கி கடைசியாக வியந்த 'சாய்ரட்' வரை காதலைக் கொண்டுதான் பயணிக்கின்றன. அப்படியான ஒரு காதல் கதைதான் 'பரக்கா மீட்ஸ் பரக்கா'.
சவுதி அரேபியாவில் ஒரு நகரத்தின் நகராட்சி அதிகாரியாக இருக்கும் பரக்கா சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். பொருளாதார ரீதியாகவும் சமூக நிலையிலும் உயர் வகுப்பைச் சேர்ந்தவள் பிபி. இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள பிபியைப் பார்த்த உடன் பரக்காவிற்கு பிடித்துவிட அவளுடன் பேசிப் பழக நினைக்கிறான். பிபியும் இதை மறுக்கவில்லை. ஆனால் சவுதி அரேபியாவின் சட்டம் திருமணம் ஆகாத ஆண்-பெண் இருவர் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து பேசுவதையும், சுற்றுவதையும் தடை செய்துள்ளது. அதனை மீறி பரக்கா என்ன செய்கிறான் என்பதே மஹ்மது சப்பஹவின் 'பரக்கா மீட்ஸ் பரக்கா'.
பல சமயங்களில் காதல்தான் சமூகத்தோடும் அரசோடும் முரண் கொள்ள செய்கிறது. இங்கும் அதுதான் நடைபெறுகிறது. பிபியைப் பார்ப்பதற்கு முன்புவரை சமூகத்தினையும் சட்டத்தினையும் எந்த கேள்வியும் கேட்காத பொறுப்பான கண்டிப்பான நகராட்சி அதிகாரியாகத்தான் இருக்கிறான் பரக்கா. ஆனால் பிபியினைப் பார்த்து பேச முடியாத போதுதான் இந்த சட்டத்தின், சமூகத்தின் மீதான கேள்விகள் அவனுக்குள் பிறக்கின்றன.
பரக்காவை பார்த்த இரண்டாவது சந்திப்பிலேயே தனது போன் நம்பரை கொடுத்து விட்டு போகிறாள் பிபி. எல்லாவற்றையும் சாதாரணாமாகக் கையாளும் பிபிக்கும் பரக்காவைப் பிடித்திருக்கிறது. ஆனால் இருவரும் அன்பை வெளியில் சொல்ல முடியாமல் போனிலேயே பேசிக் கொள்கின்றனர்.
பிபியை சந்திக்க பரக்கா போடும் திட்டங்கள் ஒவ்வொரு முறையும் சொதப்பலாக முடிந்துவிடும்போது நமக்குள் சிரிப்பு வந்தாலும் அது சவுதி அரேபிய சமூகத்தின் மீதான மிகப்பெரிய கிண்டல் என்பதை உணர முடிகிறது. ஆண்-பெண் இருவரும் பொது இடங்களில் சந்திப்பது மட்டுமல்ல, பொது விழாக்களின் தன்மை, தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு என பலவற்றையும் அரசே கட்டுப்படுத்துகிறது என்பதின் மீதான கிண்டல்தான் பரக்கா ஒவ்வொரு முறையும் சொதப்புவது. அந்த சமூக அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை பரக்கா கதாபாத்திரம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இந்த சட்டங்களோடும் சமூகத்தோடும் முரண்பட்டு, ஒரு கட்டத்தில் பிபியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான். திருமணம் செய்து கொண்டால் இதற்கெல்லாம் தீர்வு வந்துவிடும் என்று அவனை எண்ண வைத்தது கூட அந்த சமூக அமைப்புதான்.
திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பொது இடங்களில் வெறும் ஆண்களை மட்டுமே பார்க்க முடிகிறது. பெண்களுக்கான வெளி என்பது அங்கு இல்லவே இலை. பிபியின் அம்மாவும் கூட வீட்டுக்குள்ளேயேதான் இருக்கிறார். உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவருக்கும் பொது வெளியில் இடமில்லை. அதே நேரத்தில் சவுதியில் இப்போதுதான் இதுபோன்ற நிலைமை என்பதையும் ஆங்காங்கே பதிவு செய்கின்றனர். இதற்கு முன்பு இது போன்ற நிலை இல்லை.
சவுதியின் முக்கியமான சமூக பிரச்சினையை காதலோடு இணைத்து தனது சமூகத்தின் மீதான கிண்டலைச் சொல்லியிருக்கிறார் மஹ்மது சப்பஹ். பிரச்சினைக்கான தீர்வாக எதையும் முன் வைக்கவில்லை. காதலினால் அந்த பிரச்சினையை நம் கண்முன் கொண்டு வருவதோடு நிறுத்திக் கொள்கிறார் இயக்குநர். சவுதி அரேபியாவின் காதல் திரை அனுபவம் 'பரக்கா மீட்ஸ் பரக்கா'.
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், 89-வது ஆஸ்கர் விருது விழாவில் சவுதி அரேபியாவின் சார்பில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் பிரிவில் போட்டியிடுகிறது.
சா.ஜெ.முகில் தங்கம், தொடர்புக்கு: mukilthangam@gmail.com