

யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்,‘சிங்காரம்’. ‘ராஜவம்சம்’ படத்தை இயக்கிய கே.வி.கதிர்வேலு இயக்கியுள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார். ராக் புரொடக் ஷன் நிறுவனத்தின் சார்பில் ஏ.எஸ்.ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மரியா வின்சென்ட், சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் அக். 30-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
“தனது உரிமையையும் சுயமரியாதையையும் நிலை நாட்டப் போராடும் ஒரு மனிதனின் பயணத்தை, நகைச்சுவையும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இணைந்த திரைக்கதையின் வழியாக இதில் சொல்கிறோம். அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவற்றைக் கடந்து முன்னேறுவதற்கான மன உறுதியையும் மையப்படுத்தி, பொழுதுபோக்குடன் கூடிய கருத்தை இப்படம் சொல்லும். இதில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவராக யோகிபாபு நடித்துள்ளார்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.