

கவுதம் ராம் கார்த்திக், ஆர்யா நடித்திருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஏப்.17-ல் வெளியாக இருக்கிறது. ‘எப்ஐஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கி இருக்கும் இந்த ஸ்பை ஆக் ஷன் த்ரில்லர் படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர் என பலர் நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படம் பற்றிய கவுதம் ராம் கார்த்திக்கிடம் பேசினோம்.
இதுல நெகட்டிவ் கதாபாத்திரம்னு சொன்னாங்களே?
ஒரு விதத்துல பார்த்தா நெகட்டிவா இருக்கலாம். வேறு விதத்துல பாசிட்டிவாக இருக்கும். கதைப்படி யார் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தது அது. இது ஸ்பை த்ரில்லர் படம் அப்படிங்கறதால எல்லா கேரக்டரும் சில பாதையில கிராஸ் ஆகும்போது ஒருத்தருக்கு ஒருத்தர் நெகட்டிவா இருப்பாங்க. கதையில சில லேயர்கள் இருக்கறதால படம் பார்த்தாதான் அதோட அர்த்தம் புரியும்.
‘ரா’ ஏஜென்ட்டா வர்றீங்களாமே?
இந்த கதையை முதல் முறையா கேட்கும்போது பிரம்மாண்டமா இருந்தது. ஹாலிவுட்ல பண்ற கதை மாதிரி இருந்துச்சு. அணு ஆயுதம், அது இதுன்னு நிறைய இருந்துச்சு. ‘இதுலாம் உண்மையா நடக்குமா? இருந்தாலும் இயக்குநர் நல்ல யோசிச்சிருக்காரு’னு ஆச்சரியப்பட்டேன். அப்புறம்தான் இயக்குநர் சொன்னார். இதெல்லாம் உண்மைச் சம்பவங்கள், அதை அடிப்படையா வச்சுதான் இந்த கதையை எழுதி இருக்கேன்னு.
கதையில வர்ற எல்லா சம்பவத்துக்கும் அவர் ஆதாரம் வச்சிருந்தார். அதை வச்சுதான் எழுதியிருக்கார். அதுக்குள்ள முழுமையான திரை அனுபவத்துக்காக சில கற்பனைகளும் இருக்கு. இந்த மாதிரி ஒரு படத்துல இதுக்கு முன்னால நான் நடிச்சதில்லை. இதுல நடிக்க உடல் ரீதியாகவும் நான் தயாராக வேண்டியிருந்தது. சிக்ஸ்பேக் வேணும்னு இயக்குநர் கேட்டார். அதுக்காக மெனக்கெட்டு உடலை ஏத்திட்டு, முதல் நாள் ஷூட்டிங் வந்ததும் மூனு லேயர்ல டிரெஸ் கொடுத்தார்.
உடல் முழுவதையும் மறைக்கிற மாதிரி கோட், ஷர்ட். கை கூட வெளியில தெரியல. ‘எட்டு மாசம் கஷ்டப்பட்டு சிக்ஸ்பேக் பண்ணியிருக்கேன், காண்பிக்கவே இல்லையே’ன்னு இயக்குநர்கிட்ட கேட்டேன். இது நல்லாயிருக்குன்னு சொல்லிட் டார். ரொம்ப ஸ்டைலிஷா என் கதாபாத்திரத்தை டைரக்டர் உருவாக்கி இருக்கார். ரா ஏஜென்டா வர்றேன். என் கேரக்டர் பெயர் ‘அமரன்’
சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யானு படத்துல நிறைய பேர் இருக்காங்களே...
ஆமா. படத்துல எல்லா நடிகர்களோடயும் எனக்கு ‘காம்பினேஷன்’ காட்சிகள் இருக்கு. ஆனா, மஞ்சு வாரியர் கூட இல்லை. அது எனக்கு வருத்தம்தான். அவங்களோட ஒர்க்கிங் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்துல அவங்களோட நடிப்பு மிரட்டலா இருக்கும். இப்படிலாம் பண்ணு வாங்களான்னு ஆச்சரியப்பட வச்சிருக்காங்க. எல்லா நடிகர்களோடயும் மத்தவங்களுக்கும் தொடர்பு இருக்கிற மாதிரிதான் திரைக்கதை பண்ணியிருக்காங்க.
பரபரப்பான பிரம்மாண்டமான ஆக் ஷன் படமா இருக்கும். எனக்கு 70 சதவிகித காட்சிகள் ஆக் ஷன்லதான் இருக்கு. இந்தப் படத்துல நடிச்சது ரொம்ப உற்சாகமாக இருந்தது.
இதோட ஷூட்டிங்ல உங்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில இருந்தீங்களாமே?
தூத்துக்குடியில ஆக் ஷன் காட்சி ஷூட்டிங். இரும்பு சங்கிலியை வச்சு பைட் பண்ற மாதிரி காட்சி. அப்ப எதிர்பாராதவிதமா கழுத்தை இறுக்கிடுச்சு. உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். கழுத்துல சங்கிலி அறுத்து சரியான காயம். அது குணமாக ரெண்டு வாரம் ஆச்சு.
மாதவனோட ‘லெகஸி’யில நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?
நல்ல கதை. அதுலயும் ஆக் ஷன்தான் பண்ணியிருக்கேன். அதோட வேற மாதிரியான நடிப்பு தேவைப்பட்டது. அதுல நானாக இல்லாம அந்த கேரக்டர் ரவியாகவே மாறியிருக்கேன். மாதவன் மாதிரியான அனுபவம் வாய்ந்த நடிகர்களோட நடிக்கும்போது, நிறைய கத்துக்க முடியும். அவர் அவ்வளவு பெரிய நடிகர், எனக்கு எதுவும் ‘கைடு’ பண்ணணும்னு அவசியமில்லை. ஆனா, ஒரு சகோதரர் மாதிரி சொல்லிக் கொடுத்தார்.
அவங்கக் கிட்ட கத்துக்கிறது, அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கும்போது உதவியா இருக்கு. இது மட்டுமல்லாம விஜய் இயக்கத்துல கங்கனா நடிச்சிருக்கிற படத்துலயும் மாதவனோட நடிச்சிருக்கேன். அதுல ‘கேமியோ’தான். கங்கனாவுக்கு ஜோடியா வர்றேன். அந்தப் படத்துலயும் இனிமையான அனுபவம் கிடைச்சது.
தொடர்ந்து ஆக் ஷன் கதைகள்லயே நடிச்சிட்டிருக்கீங்களே... ஏன்?
இதே கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கிட்டிருக்கேன். நான் நடிச்சிருக்கிற ‘ரூட்’ வித்தியாசமான சயின்ஸ் பிக் ஷன் கதை. அதுல இந்தி நடிகர் அபர்ஷக்தி குராணா கூட நடிச்சிருக்கேன். அவருக்கும் எனக்கும் நிறைய ஆக் ஷன் காட்சிகள் இருக்கு.
அடுத்து ‘பிளடி பாலிடிக்ஸ்’ படத்துல சின்ன ஏரியாவுல வட்ட செயலாளர் லெவல்ல நடக்கிற அரசியல் கதை. அரசியல் தெரியாத ஒரு கேரக்டருக்கு அந்த ஆசை வருது. பிறகு என்ன நடக்குதுன்னு காமெடி, நையாண்டியா படம் போகும். ‘கிரிமினல்’ படமும் ஆக் ஷன் தான். அதனால இப்ப நான் கொஞ்சம் காமெடி, ரொமான்ஸ் கதைகளை கேட்க ஆரம்பிச்சிருக்கேன்.
egnathraj.c@hindutamil.co.in