

ஐஸ்வர்யா ராஜேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம், ‘அண்டர் 18’. எஸ்ஆர் புரொடக் ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், கிஷோர், சேத்தன் உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேசினோம்.
‘அண்டர் 18’ என்ன மாதிரியான கதை?
இது, உண்மை கதையின் அடிப்படையில் உருவாகும் படம். அக்கா - தம்பிக்கான எமோஷனல் விஷயங்களின் பின்னணியில் நடக்கும் கதை. இப்பதான் படம் தொடங்கி இருக்கிறதால மற்ற விவரங்களை நான் சொல்ல இயலாது. என் தம்பியா கார்த்தி கேயன் நடிக்கிறார். சுதீப் முக்கியமான கதாபாத்திரத்தில் வர்றார். எனக்கும் அவருக்கும் காம்பினேஷன் காட்சிகள் நிறைய இருக்கு. ஒசூர் பகுதியில் நடப்பது போன்ற படம். விரைவில் படப்பிடிப்பு தொடங்குது.
பான் - இந்தியா படமா?
இன்னைக்கு கதை நல்லாயிருந்தா மொழி தாண்டி எல்லா பகுதியிலும் அந்தப் படத்தைப் பார்க்கிறாங்க. அதனால எல்லா மொழி பார்வையாளர்களுக்குமான படம் இது. அதுக்கு பான் இந்தியா அப்படிங்கற பெயர் தேவையில்லை. இப்ப தெலுங்கில் உருவான வெப் தொடர் ஒன்றில் நடிச்சிருக்கேன். அமேசான் பிரைம் வீடியோவில் ஜூலையில் வெளியாகும். சமுத்திரக்கனி சாரும் அதில் நடிச்சிருக்கார்.
தமிழ்ல இப்ப அதிகமா நடிக்கவே இல்லையே?
தமிழ்ல நடிச்சு, ஒன்றரை வருஷம் ஆச்சு. அதுக்கு வாய்ப்பு வரலைன்னு அர்த்தம் இல்லை. நல்ல கதைகள்ல நடிக்கணும்னு காத்திருந்தேன். நான் தொடர்ந்து நடிச்ச ஏழு, எட்டு படங்கள், பெண்ணிய கதைகளைக் கொண்டது.
ஃபர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, கிரேட் இண்டியன் கிச்சன், க/பெ.ரணசிங்கம், கனா, காக்கா முட்டை-னு எல்லாமுமே நல்ல படங்கள் தான். இன்னைக்கும் அந்தக் கதைகளும் அதில் என் கதாபாத்திரங்களும் பேசப்படுது. அதனால, வர்ற எல்லா படங்களையும் ஏத்துக்க முடியாத நிலை இருக்கு.
நல்ல கதைகளைத் தேர்வு பண்ணிதான் நடிக்கிறேன். அதுக்குஎனக்கு நிறைய டைம் தேவைப்படுது. சினிமா நமக்கு ஒரு வாய்ப்புக்கொடுத்திருக்கு. அதை தக்க வச்சுக்கணும்னு நினைக்கிறேன். அதனால நல்ல கதைகளுக்கு காத்திருக்கிறேன்.
இப்ப தெலுங்குல நாலு படங்கள் பண்றேன். ஓ சுகுமாரி, வெங்கடேஷ் சார் படம், நாகார்ஜுனா சாரோட படம் பண்றேன். இது இல்லாம இன்னும் இரண்டு படங்கள்ல ஒப்பந்தமாகி இருக்கேன். தமிழ் சினிமா தான் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கு. அதை விட்டுவிட முடியாது. அதுலயும் கவனம் செலுத்துவேன்.
ஓடிடி- வருகைக்கு பிறகு நடிகர்கள் பிசியாயிட்டாங்கன்னு சொல்றாங்களே?
உண்மை தான். இன்னைக்கு மொழி ஒரு பிரச்சினையில்லை. நடிகரா இருக்கிற ஒருத்தர், தமிழ்ல மட்டுமில்ல, மலையாளத்துல, இந்தியில, தெலுங்குலன்னு எந்த மொழியிலயும் நடிக்கலாம். ஒரு நல்ல நடிகருக்கு எப்போதும் அங்கீகாரம் தேவையா இருக்கு. ஓடிடி வந்த பிறகு மற்ற மொழிகளுக்கும் போய் சேர்றதால அந்த அங்கீகாரம் கிடைக்குன்னு நினைக்கிறேன். இது ஆரோக்கியமான விஷயம்.
தமிழ், தெலுங்கு, அடுத்து இந்திக்கு போகிற எண்ணம் இருக்கா?
இந்தியில, ஜோதிகா மேடத்துக்கு சரியான கதைகள் அமைஞ்சிருக்கு. அது போல கதைகள் அமையணும். எனக்கு தமிழ், தெலுங்கில் நல்ல பெயர் இருக்கு. இந்தப் பெயரை காப்பாற்றினா போதும்னு நினைக்கிறேன். இந்தியிலயும் சரியான கதைகள் கிடைச்சா நடிப்பேன். பண்ணணுமே அப்படிங்கறதுக்காக ஏதோ ஒரு கதையை தேர்வு பண்ணி அங்க நடிக்க முடியாது.