

லாரன்ஸ் ஆஃப் அரேபியா...
திரைக்கதையில் ‘காற்று’ ஒரு கண்ணுக்குத் தெரியாத கதாபாத்திரம். ஒலிக் குறிப்புகள் மற்றும் காட்சிச் சிதறல்கள் வழியாக மட்டுமே உணரப் படக்கூடிய இந்தக் காற்று, ஒரு காட்சியின் தீவிரத்தை மாற்றுவதோடு, பார்வையாளரின் உணர்வுகளையும் நேரடியாகக் கையாளும் வல்லமை கொண்டது.
உணர்வுகளைக் கையாளுதல்
காற்று ஒரு திரவ நிலைப் பொருள் போலச் செயல்படுகிறது. அது அமைதியாக வீசும்போது ஒரு ஏகாந்தமான ‘மூட்’ உருவாகிறது. அதே காற்று சீறும்போது, அது ஓர் அழிவின் அல்லது ஒரு மாபெரும் மோதலின் அறிகுறியாக மாறுகிறது.
தொடுதல் உணர்வு (Tactile Sense): நடிகர்களின் தலைமுடி மற்றும் உடைகள் காற்றில் அசைவதைப் பார்க்கும்போது, பார்வையாளர் அந்த இடத்தின் வெப்பத்தையோ அல்லது குளிர்ச்சியையோ தனது தோலில் உணரத் தொடங்குகிறார்.
ஒலி அதிர்வுகள்: மரக்கிளைகளின் உரசல் மற்றும் காற்று சீறும் சத்தம், பின்னணி இசை இல்லாமலேயே காட்சியின் பதற்றத்தை அதிகரிக்கப் பயன்படும்.
வின்ட் மெஷின் மற்றும் தொழில்நுட்பம்
இயற்கைக் காற்று கேமராவுக்கு சாதகமாக வீசாதபோது, ஒளிப்பதிவாளர்கள் ‘வின்ட் மெஷின்’ அல்லது ராட்சத மின்விசிறிகளை நாடுகின்றனர்.
கட்டுப்படுத்தப்பட்ட வேகம்: மெல்லிய தென்றல் முதல் சூறாவளி வரை ஒளியமைப்புக்கு இடையூறு இல்லாமல் காற்றைச் செலுத்த முடியும்.
டைனமிசம்: ஒரு நிலையான ஷாட்டில் (Static Shot) கூட, திரைச்சீலைகள் அல்லது நடிகரின் ஆடைகள் காற்றில் அசைவது அந்தக் காட்சிக்கு உயிரோட்டத்தைத் தரும்.
காற்றைப் படம்பிடிக்கும் போது, அதன் வேகத்துக்கு ஏற்ப கேமராவின் ‘ஷட்டர் ஸ்பீடு’ மற்றும் ‘ஃபிரேம் ரேட்’ ஆகியவற்றைச் சரியாக அமைப்பது அவசியம். அப்போதுதான் காற்றில் பறக்கும் தூசிகளோ அல்லது இலைகளோ மிகத் தெளிவாகவோ அல்லது ஒருவிதமான மென்மையான அசைவிலோ பதிவாகும்.
ஒளிப்பதிவாளர்களின் விருப்பம் -ஜாங் யிமோ -
‘தி ஹீரோ’ சீன இயக்குநர் ஜாங் யிமோவின் படங்களில் காற்று ஒரு தற்காப்புக் கலைக் கருவியாகவே செயல்படும். ‘த ஹீரோ’ படத்தில், உதிர்ந்த காய்ந்த இலைகளுக்கு நடுவே நடக்கும் வாள் வீச்சு சண்டையில், காற்றின் வேகம் அந்த வீரர்களின் மன உறுதியைப் பிரதிபலிக்கும். இலைகள் காற்றில் சுழன்று பறப்பது, அந்தச் சண்டையின் வேகத்தையும் திசையையும் (Directional Energy) பார்வையாளருக்குக் கடத்தும்.
ஒளிப்பதிவாளர் அழகப்பனின் ‘ஒரே கடல்’
மலையாளத் திரைப்படமான ‘ஒரே கடல்’ படத்தில் ஒளிப்பதிவாளர் அழகப்பன் தனித்துவமான நுட்பத்தைக் கையாண்டார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடுக்குமாடி குடியிருப்பின் உட்புறத்திலேயே நடக்கும். அந்த இடத்தின் தேக்க நிலையை (Stillness) உடைக்க அவர் வின்ட் மெஷின்களைப் பயன்படுத்தினார்.
கடலோரத்தில் இருக்கும் அந்த அறையில், கடல் காற்றின் ஈரப்பதத்தையும் அதன் அலை அலையான அசைவையும் (Replicating Sea Breeze) நடிகர்களின் அசைவுகளில் கொண்டு வந்தார். இது உட்புறக் காட்சிகளுக்கு ஒரு ‘டைனமிசம்’ வழங்கியதுடன், கதை மாந்தர்களின் அலைபாயும் மனநிலையையும் குறியீடாக உணர்த்தியது.
காற்றின் முப்பரிமாண மொழி: வெளியும் உளவியலும் (Wind Defines Space)
ஒளிப்பதிவில் காற்று என்பது ஒரு நிலப்பரப்பின் ஆழத்தையும் அடுக்குகளையும் வெளிப்படுத்தும் ஒரு கருவி. ஒரு தட்டையான பிம்பத்தை இடம் சார்ந்த உயிர்ச்சக்தியுடன்
மாற்றக் காற்று உதவுகிறது:
* முன் புலம் -இலைகள் லேசாக நடுங்குவது.
* நடுப் புலம் -காற்றில் பறக்கும் தூசுப் படலங்கள்.
* பின் புலம் -மரங்கள் ஒட்டுமொத்தமாக ஆடுவது.
இந்த 3 அடுக்குகளும் ஒரே சீராகவோ அல்லது வெவ்வேறு வேகத்திலோ அசையும் போது, அந்தச் சட்டகத்துக்குள் ஒரு ‘முப்பரிமாணத் தன்மை’ உருவாகிறது. காற்றின் திசை, வெளியின் வெறுமை மற்றும் ஏதோ ஒன்று நம்மை நெருங்கி வருகிறது என்கிற அந்த அமானுஷ்ய உணர்வு (Presence of something approaching) ஆகியவற்றை அசைவுகளின் மூலமே காற்று உணர்த்துகிறது.
காற்றின் உளவியல் நீட்சி
ஒரு கதாபாத்திரத்தின் அக நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் காற்று செயல்படுகிறது. ஓர் உண்மையை உணரும் கணத்தில் ஏற்படும் திடீர் காற்று, பெரும் துயரம் நிகழ்வதற்கு முன்னால் நிலவும் உறைந்து போன நிசப்தமான காற்று, மோதல்கள் வெடிக்கும் போது வேகம் எடுக்கும் சுழல் காற்று, இவை அனைத்தும் வசனங்கள் இல்லாமலேயே அந்தத் தருணத்தின் கனத்தை அதிகப்படுத்தும் ‘சொற்களற்ற உணர்ச்சிப் பெருக்கி’ (Non-verbal emotional amplifier) போலச் செயல்படுகின்றன.
போர்த் திரைப்படங்களில் காற்றின் தாக்கம்
போர் முனையில் காற்றின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. அது வீரர்களின் சோர்வையும், போர்க்களத்தின் பயங்கரத்தையும் வெளிப்படுத்த உதவும்.
‘சேவிங் பிரைவேட் ரையன்’
கடற்கரை சமர் காட்சிகளில், மணல் துகள்கள் காற்றில் பறந்து கேமரா லென்ஸில் படுவது போன்ற காட்சிகள், அந்தப் போரின் தீவிரத்தை யதார்த்த மாகக் காட்டின.
‘டன் கிர்க்’ (Dunkirk): கிறிஸ்டோபர் நோலன் இந்தப் படத்தில் காற்றின் இரைச்சலை ஒரு ‘டைம் பாம்’ போலப் பயன்படுத்தினார். கடற்கரையில் காத்திருக்கும் வீரர்களின் தலைமுடி காற்றில் அலைக்கழிக்கப்படுவது, அவர்கள் இயற்கையிடமும் காலத்திடமும் தோற்றுக்கொண்டிருப்பதை உணர்த்தும்.
‘மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோட்’
பாலைவனப் புயல் காட்சிகள் காற்றின் கோரத் தாண்டவத்தைக் கண்களுக்கு ஒரு காட்சி விருந்தாக மாற்றின. மணல் துகள்களும் புகையும் காற்றில் சுழல்வது ஒரு அமானுஷ்யமான சூழலை உருவாக்கின.
‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’
பாலைவனக் காற்றினால் உருவாகும் மணல் மேடுகளின் அசைவு, அந்த இடத்தின் புவியியல் மாற்றத்தை அழகியல் ரீதியாகக் காட்டியது. காற்றை ஒளியமைப்புடன் இணைத்து பயன்படுத்துவது ஓர் உயர்ந்த கலை.
‘வால்யூமெட்ரிக் லைட்டிங்’ (Volumetric Lighting) அல்லது ‘காட் ரேஸ்’ (God Rays) போன்ற ஒளிக்கற்றைகள் காற்றில் பறக்கும் தூசித் துகள்கள் அல்லது புகை மூலமாகத் தென்படும் போது, காட்சி ஓர் ஆன்மீகத் தன்மையையும் ஆழத்தையும் பெறுகிறது.
இதனை ஸ்டூடியோவில் செயற்கையாக உருவாக்க ‘ஹேஸ்’ (Haze) அல்லது ‘ஸ்மோக்’ (Smoke) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. போலவே, காற்றின் திசை (Direction) மற்றும் தொடர்ச்சியும் (Continuity) மிகவும் முக்கியமானவை. ஓர் காட்சியில் காற்று இடமிருந்து வலமாக வீசினால், அடுத்த ஷாட்டிலும் அதே திசை தொடர வேண்டும். இல்லையெனில், அது பார்வையாளரின் கவனத்தைத் திசைதிருப்பும்.
காட்சியின் உளவியல் தாக்கத்திலும் காற்று மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மெதுவாக அசையும் திரைச்சீலை ஒரு எதிர்பார்ப்பை (Anticipation) உருவாக்கலாம்; திடீரென கதவு அடிபடுவது ஓர் அதிர்ச்சியை (Shock) ஏற்படுத்தும். எனவே, காற்று என்பது ஒரு ‘எஃபெக்ட்’ மட்டுமல்ல, அது ஒரு ‘நேரேட்டிவ் டூல்’ (Narrative Tool) என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)
- cjrdop@gmail.com