விஸ்வநாத் & சன்ஸ்: விமர்சனம் - சூர்யாவின் நெகிழவைக்கும் ஃபேமிலி டிராமா எப்படி?

விஸ்வநாத் & சன்ஸ்: விமர்சனம் - சூர்யாவின் நெகிழவைக்கும் ஃபேமிலி டிராமா எப்படி?
Updated on
3 min read

கடந்த சில அண்டுகளாக ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் இயல்பான குடும்ப கதைக்களத்தில் இறங்கியுள்ள படம்தான் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’. ‘லக்கி பாஸ்கர்’ வெற்றிக்குப் பிறகு வெங்கி அட்லுரியும், ‘கருப்பு’ வெற்றிக்குப் பிறகு சூர்யாவும் இணைந்துள்ள இப்படத்தின் மூலம் இருவரும் தங்களின் முந்தைய வெற்றியை தக்கவைத்துள்ளார்களா என்று பார்க்கலாம்.

தொழிலதிபர் சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றவர். தனது தந்தையிடமிருந்து "எந்தவொரு பொருளோ உறவோ உடைந்தால் அதைச் சரிசெய்ய வேண்டும், முடியாத பட்சத்தில் மட்டுமே புதியதைத் தேட வேண்டும்" என்ற பாடத்தை கற்றுக்கொண்டவர். ஆனால், சில கசப்பான சம்பவங்களால் திருமண உறவின் மீது அவருக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அவரது தாய் நிர்மலா தேவி (ராதிகா) எவ்வளவோ முயற்சி செய்தும் தனது மகனுக்கு திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருக்கிறார். 

எனினும் ஒரு இக்கட்டான சூழலில் தாயின் ஆசையை நிறைவேற்ற, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு மருத்துவருடன் தொலைபேசியில் பேசி பழகத் தொடங்குகிறார் சஞ்சய். ஆனால், ஒரு வருடம் கழித்து சென்னையில் ஒரு ஆண் குழந்தையுடன் வந்திறங்கி அதை தன் மகன் என்று அறிமுகப்படுத்துகிறார். அக்குழந்தைக்கு அரிதான உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது, 22 வயதான மேடி என்ற இளம்பெண் (மமிதா பைஜூ) கதைக்குள் வருகிறார். அந்த குழந்தை யாருடையது? மேடி யார்? குழந்தையைக் காப்பாற்ற அவர் எவ்வாறு உதவுகிறார் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘விஸ்வநாதன் & சன்ஸ்’.

படத்தின் தொடக்கக் காட்சியிலேயே இது வழக்கமான மாஸ் ஹீரோ கதை அல்ல என்பதை மிகத் தெளிவாக உணர்த்திவிடுகிறார் இயக்குநர் வெங்கி அட்லுரி. வழக்கமான மாஸ் ஹீரோவாக பறந்து பறந்து அடிப்பது, பஞ்ச் வசனங்கள் பேசுவது போன்றவற்றை தவிர்த்து, சஞ்சய்யின் ஆளுமையை அவரது செயல்கள் மூலமே அறிமுகப்படுத்திய விதம் சிறப்பு.

ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் முன், ஏற்படும் தடங்கலின் போது, தனது தந்தையின் அறிவுரையை நினைவுகூர்ந்து தனக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அதே ஸ்ப்ரே பெயின்ட்டால் தனது ஆடையில் ‘இந்தியா’ என்று எழுதிப் போட்டியில் வெல்லும் அந்தக் காட்சி, இயக்குநரின் புத்திசாலித்தனமான எழுத்துக்கு சான்று.

ராதிகா - சூர்யா இடையிலான பிணைப்பு, அதே போல மமிதா - ராதிகா இடையிலான காட்சிகள் என முதல் பாதி முழுக்கவே சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை. சூர்யா - மமிதா இடையிலான உரையாடல்களும் முதல் பாதிக்கு பலம் சேர்த்துள்ளன.

குறிப்பாக, ராதிகா, மமிதா இருவரில் ஒருவர்  சொதப்பி இருந்தால் கூட பல காட்சிகள் படுத்திருக்கும் என்னும் அளவுக்கு போட்டி போட்டு நடித்துள்ளனர். முதல் பாதி முழுக்க நகைச்சுவை ஒருபுறம் கைகொடுத்துள்து என்றால், மறுபுறம் உணர்வுபூர்வ காட்சிகளும் பார்ப்பவர்களை நெகழ வைக்கின்றன.

வெறுமனே வலிந்து திணிக்காமல் எமோஷனல் காட்சிகள் எழுதப்பட்ட விதம் ஒருவித நிறைவான உணர்வை தருகின்றன. ஒரு ஃபேமிலி டிராமா கதைக்களத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான் என்பதை இயக்குநர் நன்கு உணர்ந்து அதற்கான காட்சிகளை அமைத்துள்ளார்.

தனது முந்தைய படமான ‘கருப்பு’வில் இருந்த 'மாஸ்' பிம்பத்தின் சுவடே தெரியாமல் மிக அமைதியான, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா. தனது பொறுப்பான கதாபாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சியை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பு. அவருடைய ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும், டயலாக் டெலிவரியும் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது. 

மமிதா பைஜூ, 'மேடி' கதாபாத்திரத்துக்கு தனது துள்ளலான நடிப்பால் உயிரூட்டியுள்ளார். தான் வரும் காட்சிகளில் வெளிப்படும் ‘எனர்ஜி’ மூலம் அப்ளாஸ் அள்ளுகிறார். கொஞ்சம் பிசகினாலும் ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லிவிடக் கூடிய நிலையில், அப்படி எதுவும் நடக்காமல் நல்ல நடிப்பை தந்திருக்கிறார். 

படத்தில் குறிப்பிடத்தக்க பாராட்டை பெறுபவர் ராதிகா. வழக்கம்போல தனது அட்டகாசமான நடிப்பால் மனதை கவர்கிறார். ரவீனா டாண்டனின் டயலாக் டெலிவரியும், நடிப்பும் ஒப்பீட்டளவில் சுமாராக தெரிவது பெரும் குறை.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இதமான பின்னணி இசையும், நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பிரம்மாண்டத்தையும் அழகையும் சேர்க்கின்றன. 

முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யமும், உணர்வுபூர்வ காட்சிகளும் இரண்டாம் பாதியில் மிஸ் ஆவதால், அதுவரை நேர்த்தியாக எழுதப்பட்டிருந்த திரைக்கதை தள்ளாடத் தொடங்கிவிடுகிறது. குறிப்பாக முதல் பாதிக்கு பலம் சேர்த்த மமிதா, ராதிகா இருவருக்கான காட்சிகளுமே கிட்டத்தட்ட இரண்டாம் பாதியில் குறைந்து போய்விடுவதும் அதற்கு ஒரு காரணமாக தோன்றுகிறது.

இரண்டாம் பாதியில் வரும் பல காட்சிகளும் கணிக்கக் கூடிய வகையிலே இருப்பதும் ஒரு மிகப் பெரிய குறை. நாயகன் தனது பண பலத்தால் அனைத்துப் பிரச்சினைகளையும் மிக எளிதாகத் தீர்ப்பது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. நகைச்சுவை காட்சிகளும், சூர்யாவின் நடிப்பும் ஓரளவு பாதகமில்லாமல் காப்பாற்றுகின்றன.

எனினும் படத்தின் க்ளைமாக்ஸை அமைத்த விதத்தில் ஒரு எழுத்தாளராக வெங்கி அட்லுரி தனது முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த முடிவு சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்தது போலத் தோன்றினாலும், வேறு எந்த ஒரு முடிவும் செயற்கையாகவே அமைந்திருக்கும். பரஸ்பர எல்லைகளை மதிக்கும் ஓர் ஆரோக்கியமான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த முடிவு மிக நிறைவாக உணர்த்தி இருப்பதாகவே தோன்றுகிறது. ஒரு மாஸ் நடிகரின் படத்தில் இதுபோன்ற விஷயத்தை காண்பது மிகவும் அரிதான ஒன்று.

சில திரைக்கதைத் தொய்வுகளும் இரண்டாம் பாதியில் குறைகளும் இருந்தாலும், எந்தவொரு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளோ, வலிந்து திணிக்கப்பட்ட வன்முறையோ இல்லாமல், குடும்பத்தோடு சென்று திரையரங்கில் கண்டு மகிழும் வகையில் ஒரு நெகிழ்வான, முற்போக்கான  கதையை கொண்டிருப்பதில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஜெயிக்கிறது. 

விஸ்வநாத் & சன்ஸ்: விமர்சனம் - சூர்யாவின் நெகிழவைக்கும் ஃபேமிலி டிராமா எப்படி?
Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in