

‘மகுடம்’ படத்தின் கடைசி எட்டு நிமிடங்கள் யாரும் பார்த்திராத மேஜிக்காக இருக்கும். ஈகோ இல்லாத கூட்டத்தின் வெற்றிதான் இந்த ‘மகுடம்’ என்று நடிகரும் இயக்குநருமான விஷால் தெரிவித்துள்ளார்.
விஷால் இயக்குநராக அறிமுகமாகி, நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான விஷால், ‘நான் இந்த இடத்தில் இத்தனை பாசிட்டிவாக நிற்பதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்த என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
எல்லோருக்கும் இக்கட்டான சூழ்நிலை வரும். நானும் 14 மாதங்கள் நடிக்க முடியாமல் வீட்டில் முடங்கி இருந்தேன். ஒரு வருடம் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், ஆர்.பி.சவுத்ரி சார் என் மீது வைத்த நம்பிக்கை, திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணன் கொடுத்த நம்பிக்கைகளுக்கு நன்றி. அவை வீண் போகக்கூடாது என்ற என் உழைப்பின் பலனே தமிழ், தெலுங்கில் வெளியாக இருக்கும் இந்த படம்.
என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். திரைக்கு முன்னும், பின்னும் இருந்து வேலை செய்யும் சவாலை இந்தப் படம் எனக்கு தந்தது. ஈகோ இல்லாத அந்தக் கூட்டத்தால் தான் ‘மகுடம்’ வெற்றிகரமாக வந்துள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படம் படம் இது. அவர்கள் அறிமுகப்படுத்தும் 45-வது புதுமுக இயக்குநர் நான். என் குருநாதர் அர்ஜுன் சார்தான் என்னை நடிக்கச் சொன்னது. அவரிடமிருந்து, பாலா அண்ணனிடமிருந்து, சுந்தர்.சி சாரிடமிருந்து இப்படி பலரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை இதில் செயல்படுத்தி இருக்கிறேன்.
‘மகுடம்’ படத்தின் கடைசி 8 நிமிடங்கள் மேஜிக்காக இருக்கும். படத்தின் மிகப் பெரிய பலம் டார்லிங் ஜி.வி.பிரகாஷ். புதுமுக இயக்குநருக்கு அவர் ஒரு வரம். ஈகோ இல்லாமல் பாடல்களை போட்டுக் கொடுத்து உள்ளார்.
இளையராஜா சாருக்கு மிக பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு பெரிய ரசிகனான நான், அவரை இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.
எனக்கு பிடித்த நடிகர், இன்று முதல்வராக இருக்கும் விஜய்யின் படத்தை எப்படி ரோகினி தியேட்டரில் பார்த்து ரசித்தேனோ, அதேபோல ‘மகுடம்’ படத்தையும் அதே தியேட்டரில் ரசிக்கப் போகிறேன். நீங்கள் எப்படி ரசிக்க போகிறீர்கள் என்றும் பார்க்க போகிறேன்.
படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது. வெற்றி விழாவில் இன்னும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். இது திமிர் இல்லை. ரசிகனாக உட்கார்ந்து பல படங்களை பார்த்திருப்பதால், அந்த ரசனை தெரிந்திருப்பதால் உண்டான நம்பிக்கை. ஆகஸ்ட் 14-ம் தேதி திரையில் பார்த்துவிட்டு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று பேசினார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விஷால் இயக்கி நடித்திருக்கும் ‘மகுடம்’ படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முதலில், ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்கும், விஷாலுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால், படத்தை விஷால் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.