

தனது வீடியோ பதிவு வைரலானது தொடர்பாக சமுத்திரக்கனி விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குநர் பாலா, சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலானது. அதில் விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருந்தார் சமுத்திரக்கனி. அவரும் பேசியது விஜய்யை தான் என்று இணையத்தில் ரசிகர்கள் பலரும் அவரை வசைபாட தொடங்கினார்கள்.
அந்த வைரலான வீடியோ பதிவு குறித்து சமுத்திரக்கனியிடம் பேட்டியொன்றில் கேட்கப்பட்டது. அதற்கு, “நான் பேசும் போது வீடியோ எடுக்கிறார்கள் என தெரியும். ஆனால் ஆரம்பத்தில் இருந்து என்ன பேசினேன் என்பதை எடுக்கவில்லை. இறுதியாக பேசியதை மட்டுமே எடுத்தார்கள். நானும் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. சந்தோஷமோ, வேதனையோ அதை அப்படியே பேசிவிட்டு, அடுத்த தளத்துக்கு சென்றுவிடுவேன்.
அந்த வீடியோ பதிவு வந்துவிட்டது. அதற்கு மேல் மானே, தேனே எல்லாம் சேர்த்து வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக நினைக்கவில்லை. அதே போல் பேசிவிட்டு பின் வருந்தவும் இல்லை. என் மனதில் பட்டதை தானே பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.