

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து பாலாஜி தரணிதரன் இயக்கி வரும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.
மணிரத்னம் - விஜய் சேதுபதி இருவரும் இணையும் படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் மணிரத்னம் - விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம், விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.