

அருள்நிதி - அமீர் இணைந்து நடித்துள்ள ‘வேட்ட சாமி’ படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘பம்பர்’ படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கி இருக்கும் ‘வேட்ட சாமி’ படத்தில் அருள்நிதி, அமீருடன், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பெராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘வேட்ட சாமி’ இந்த டிசம்பரில் திரையரங்குகளில் வெளியாகும். சட்டத்தில் இருந்து தப்பி, இறைவனை எதிர்கொள் எனத் தெரிவித்துள்ளது.
7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்துக்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.