

சில மரணங்கள் ஒரு காய்ந்த இலை காற்றில் பறந்து கண்ணுக்குத் தெரியாமல் பூமியில் விழுந்து மறைவது போல நிகழ்ந்து மறைந்து போகும். சில மரணங்கள் இதயத்தின் ஆழத்தில் நிலநடுக்கத்தை உணரச்செய்து விட்டுப் போகும். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், மிகச்சிறந்த இயக்குநர், மிகச்சிறந்த ஆய்வாளர், மிகச்சிறந்த எழுத்தாளர், மிகச்சிறந்த ஆசிரியர் என கலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஆழமாக இயங்கிக் கொண்டிருந்த அண்ணன் செழியனின் மரணம், அந்தக் காலையின் அமைதியில் அணுகுண்டை வீசியதுபோல இருந்தது என்பது எந்த விதத்திலும் மிகையல்ல!
எத்தனையோ மரணச்செய்தியை கேட்டிருந்தாலும், சில மரணச் செய்திகள் இதயத்தை சுக்குநூறாக உடைத்து இயக்கத்தை சில நொடிகளாவது நிறுத்திவிடக் கூடியவை. அண்ணன் செழியனின் மரணச் செய்தி அதைத்தான் செய்தது. மருத்துவமனையிலிருந்து வந்த உடலை இறக்கிவைத்துவிட்டு, கடைசியாக முழுநாளும் அவர் பக்கத்திலேயே இருந்தேன். உறவினர்களின் கண்ணீர், சக கலைஞர்களின் கண்ணீர் என எல்லாவற்றையும் தாண்டி அழுதும் அழுகாமலும் மவுனமாக அந்த இடத்தில் பல இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல, அவருடைய மாணவர்கள்தான்.
நேரடியாக அவரிடம் சினிமாவைக் கற்றுக்கொண்ட மாணவர்களை விட, ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு வகையில், ஒரு சந்திப்பில், சில மணி நேர உரையாடலில், அவருடைய எழுத்தில் வழியாக சினிமாவைக் கற்றுக்கொண்டவர்கள், அந்தப் பாதையில் சினிமாவைக் கற்றுக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய ஆழமான அமைதியை அஞ்சலியாக செலுத்திக் கொண்டிருந்தார்கள். அண்ணன் என்று அவரை அழைத்து வந்தாலும் ஒருவகையில் நானும்கூட அவருடைய மாணவன்தான். வாழ்க்கையில் சிறந்த ஆசிரியரை இழப்பதைவிட பேரிழப்பு எதுவும் இருப்பதாக இப்போது எனக்குத் தெரியவில்லை.
துயரம் நிறைந்திருந்த அந்த இடத்தில் காலையிலிருந்து இறுதி காரியங்கள் முடிந்த மாலை வரையிலும் அவருடைய வேலைகள் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருந்தன. நிறைவேறிய மற்றும் நிறைவேறக் காத்திருக்கும் அவருடைய கனவுகள் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு கொண்டே இருந்தன. வியாபாரத்திலிருந்து சினிமாவைப் பிரித்தெடுத்து ஜனரஞ்சகமாக்க வேண்டும் என்ற அவருடைய இலட்சியம் அங்கே ஏதாவது ஒரு உதடுகளிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. சினிமாவைக் கைப்பற்றியிருக்கும் எல்லா விதமான அதிகாரத்தையும் அழித்துவிட்டு, மக்களுக்கானதாக சினிமாவை மாற்ற வேண்டும் என்ற அவருடைய வேட்கை தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
சிவகங்கை மாவட்டத்தின் நாட்டரசன் கோட்டையில் பள்ளி ஆசிரியர்களுக்கு மகனாகப் பிறந்தவருக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு ஞானம்! தந்தையிடமிருந்து வெளிப்பட்ட ஓவியம், தாயிடமிருந்து வெளிப்பட்ட இசை அவருடைய பால்யத்திலேயே அவருக்குள் கலையுணர்வை நிரம்பச் செய்திருந்தது. பள்ளிப்பருவத்திலேயே கிடைத்த நண்பர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் கலையுணர்வைப் பெற்றிருந்தது கனவுகளை விடாமல் பற்றிக்கொள்ள வழிவகை செய்திருந்தது. கல்லூரியில் தொழில்நுட்பக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும், குறும்படம் எடுப்பதிலும், நாடகங்கள் நடத்துவதிலும், கேமராவை இயக்குவதிலும் உற்சாகமாக கழிந்தன அந்த நாட்கள் என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கவிஞர் மீராவுடனான நெருக்கம் கவிதையின் வாசல்களைத் திறக்க, ஒளிப்பதிவுக் கருவியின் வழியாக கவிதை எழுதக் கற்றுக் கொள்கிறார். ஒரு கவிதையின் காட்சி அழகியலை அவர் விவரித்துக் கேட்பது எப்போதுமே ஆர்வமூட்டக் கூடியதாக இருந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நக்கீரனாரின் நெடுநல்வாடை தொடங்கி போரின் வலிகடத்தும் பாலஸ்தீனக் கவிதைகள் வரையிலும் காட்சிப்படுத்துதலைப் பற்றி மணிக்கணக்காக உரையாடி இருக்கிறோம். கற்றுக்கொள்வதின் வழியாக ஒரு கலைஞன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர்தான்.
நல்ல ரசனை நல்ல தேடலுக்கு வழிவகுக்கும். நல்ல தேடல் உங்களைப் பகிர்ந்துகொள்ளத் தூண்டும். அடுத்த கட்டமாக உங்களையும் செய்து பார்க்கச் சொல்லி உள்ளுக்குள் இருந்து வற்புறுத்தும். கற்றுக் கொள்வது எப்படியோ கற்றுக்கொடுப்பதின் மூலமாகவும் அண்ணன் செழியனைப்போல ஒரு நல்ல கலைஞன் காலங்களைத் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருப்பான். எப்போதும் தன்னை சினிமாவின் மாணவனாகக் கருதிக் கொண்டவர், எவ்வளவு ஆழமான பாராட்டு என்றாலும் அளவான புன்னகையால் அதை சிறிது நேரத்தில் கடந்து செல்லக் கூடியவர்.
என் வயதொத்த எல்லோருக்கும் அவருடைய உலக சினிமாக புத்தகம்தான் சினிமாவிற்கான திறவுகோலாக இருந்தது என்பதை எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று இயக்குநராக இருக்கும் பலபேருக்கு உலக சினிமா புத்தகம் நிறைய நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகச் சொல்லியிருப்பதைக் கவனித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும்போதே மிகப்பெரிய வாசகப் பரப்பை உருவாக்கியது உலக சினிமா தொடர். அவர் எழுத்தில் இருக்கும் எளிமையான அழகு அதற்கு முக்கிய காரணம். அவரைப்போலவே அவருடைய மொழியும் வசீகரமானது. அவரைப்போலவே அவருடைய மொழியும் மென்மையானது. எப்படி எழுத்தோ அப்படியே ஒளிப்பதிவும். எப்படி ஒளிப்பதிவோ அப்படியே அவரும் என்பதுதான் அவரை நான் உணர்ந்துகொண்ட விதம்.
அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் அதிகமாக நான் கேட்ட வார்த்தைகள் உலக சினிமாதான். அந்த வகையில் அவருடைய வாழ்க்கை முழுமையானதுதான். உலக சினிமா கட்டுரைகளுக்காக அவர் உழைத்த உழைப்பு ஒரு மனிதன் செய்யக்கூடியதல்ல! ஊர்கூடி இழுக்க வேண்டிய தேரை ஒருவன் இழுத்து வந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட செயல்தான் உலக சினிமா புத்தகம். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் நடந்து திரிந்து அலைந்த அலைச்சல், திரைப்படத்தைப் பார்ப்பது, அந்தத் திரைப்படத்தின் திரைக்கதையை தேடி வாசிப்பது என இன்றுபோல் இணையம் இல்லாத காலத்தின் வேலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உழைப்பிலிருந்து எல்லாம் என்பதற்கு உதாரணம்.
”உலக சினிமாவை நான் எழுதிவிட்டேன், அதில் அரசியல் சினிமாக்களை நீங்கள் எழுதுங்கள்” என்று வலியுறுத்தியவர். ”உங்கள் எழுத்து பெரிய பத்திரிக்கைகளில் வரவேண்டும் தம்பி” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதை செய்தும் காட்டியவர். இதோ இந்து தமிழ் திசையில் சினிமாவும் அரசியலும் தொடரில் 39 படங்களை எழுதிவிட்டேன். போன வாரம் வரைக்கும் 38 கட்டுரைகளுக்கும் இதயத்தைப் பரிசளித்தவருக்கு கடந்த சனிக்கிழமை வெளிவந்த கட்டுரையை அனுப்ப முடியவில்லை. எந்தப் படத்தைத் தேர்ந்தெடுப்பது என்று ஏதாவது ஒருவாரம் குழப்பம் இருக்கும். இதை எழுதுங்கள் என்று பெயரை அனுப்புவார். இனி? அனுப்பிய அத்தனை செய்திகளும் கைப்பேசியில் இருக்கிறது. அவர்தான் இல்லை என்பதை இப்போதும்கூட ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
நான்கு வருடங்களுக்கு முன்னால் இருபதுக்கும் மேற்பட்ட திரைக்கதைகளை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனாகத்தான் அவரைச் சென்று சந்தித்தேன். கவிதை நூல்களை எல்லாம் வாங்கிக்கொண்டு, கவிதை பற்றிய உரையாடல் முடிந்ததும், ”நல்ல திரைக்கதை இருந்தால் சொல்லுங்க, சேந்து பண்ணலாம்” என்றார். ஐந்து கதைகளை அவரோடு பகிர்ந்து கொண்டேன். எல்லாக் கதைகளும் பிடித்திருந்தாலும் கூட ஐந்தாவது கதை அவருக்குச் சரியாக இருப்பதாகச் சொன்னார். “நாளையிலிருந்து இந்தக் கதையில் வேலைசெய்வோம் தம்பி” என்றார். நான் ”திரைக்கதையாகவே வைத்திருக்கிறேன்” என்றேன். மெல்லிய சிரிப்போடு ”தொடங்குவோம்” என்று சொல்ல, விடைபெற்றேன்.
வீட்டிற்கு வருமுன் கைப்பேசியில் பதினைந்து படங்களின் பட்டியலோடு ஒரு குரல்செய்தி. “எழுத்து வேலையைத் தொடங்குமுன் ஒவ்வொரு நாளும் ஒரு படத்தைப் பார்ப்போம், விவாதிப்போம். அதற்குப் பிறகு எழுதத் தொடங்குங்கள்” என்ற அன்பின் குரல். எழுதத்தெரிந்த எனக்கு எதைக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கிறார் என்ற சந்தேகத்தோடு இரவு அல்லது அதிகாலையில் படத்தைப் பார்த்துவிட்டு அழைப்பேன். அவரும் தயாராக இருப்பார். கதை, திரைக்கதை, இயக்கம், காட்சியமைப்பு, கதைக்குள்ளிருக்கும் அரசியல், சொல்லப்பட்டது அதைவிட முக்கியமாக சொல்லாமல் விட்டது என விடியும்முன் உரையாடல் முடியும். இப்படியே பதினைந்து நாட்கள், பலமணிநேர உரையாடல்கள். பதினாறாவது நாள் ‘சரி தம்பி பயிற்சி முடிந்தது, எழுதத் தொடங்குங்கள்’ என்றார். எல்லாம் தெரிந்தது போல நடந்து கொண்டிருக்கிறோமோ என்று உண்மையில் வெட்கமாக இருந்தது.
குழந்தைக்குச் சோறூட்டும் தாயைப்போல வலிக்காமல் அடிக்கக்கூடிய தாய் அவர். மதிப்பிற்குரிய ஓவியர். சந்ரு சொல்வார், ‘குழந்தைக்குச் சோறூட்டுவதன் வழியாக பிரபஞ்சத்தின் சகலத்தோடும் உறவாடக் கூடியவள் தாய்’ என்று. அண்ணன் செழியனும் கற்றுக் கொடுப்பதின் வழியாகப் பிரபஞ்சத்தின் சகலத்தோடும் உறவாடக் கூடியவர். தி பிலிம் ஸ்கூல் என்ற பெயரில் அவர் தொடங்கியது வெளிப்பார்வைக்கு சினிமாவைக் கற்றுக்கொடுக்கும் இடமாகத் தெரியலாம். ஆனால் அவருக்குள் இருந்தது சினிமாவை எளிமையானதாக மாற்ற வேண்டும் என்ற வேட்கைதான். சினிமாவை வியாபரிகளின் கரங்களிலிருந்து பிடுங்க வேண்டும் என்ற கோபம்தான். சினிமாவை மக்களுக்கு எதிரானவர்களிடமிருந்து தட்டிப் பறிக்க வேண்டும் என்ற வெறிதான். சினிமாவை மாற்றத்திற்கான கருவியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்ற உறுதிதான். என்னைக் கேட்டால், அவர் எல்லாவற்றையும் செய்து விட்டார். நட்சத்திரங்களை நோக்கி எல்லோரையும் நகர்த்திவிட்டார், இனி எட்டிப்பிடிப்பது நம் கைகளில்தான். அவ்வளவுதான் அவருக்கு செய்யக்கூடிய மரியாதை அதுவாகத்தானே இருக்க முடியும்.
அண்ணா, கவிதையும் திரைக்கதையுமாக எழுத்தே போதுமென்று வாழ்ந்து கொண்டிருந்த என்னை, எதற்காகக் குறும்படம் இயக்கச் சொன்னீர்கள் என்று இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியபின் வெளியிடலாம் என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டீர்கள். வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நாம் திட்டமிட்டிருந்த வேலைகளைச் செய்து முடிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உங்களோடு இந்த நான்கு வருடங்கள் உழைத்த உழைப்பு என்னைக் காலத்திற்கும் நகர்த்தும் என்று நம்புகிறேன். ஓய்வெடுங்கள் செழியன் அண்ணா!
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com