

இயக்குநர் பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் கடந்த 1941-ம் ஆண்டு பெரிய மாயத்தேவர், மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தம்மா ஆகியோருக்கு 5 வது குழந்தையாக பிறந்தவர், பாரதிராஜா. சுகாதாரா ஆய்வாளராக பணியாற்றிய இவர் சினிமா ஆசை காரணமாக, வேலையை விட்டுட்டு சென்னை வந்தார்.
இயக்குநர் பி. புல்லையாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். தொடர்ந்து, புட்டண்ணா கனகலிடம் பணிபுரிந்தார். பின்னர் எம்.கிருஷ்ணன் நாயர், அவினாசி மணி, ஏ.ஜெகந்நாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
தமிழ் சினிமாவில் ‘கல்ட்’
1977-ம் ஆண்டு ‘பதினாறு வயதினிலே’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி, கவுண்டமணி உள்பட பலர் இதில் நடித்தனர்.
இந்தப் படம் அப்போதைய வழக்கமான திரைப்படப் பாணிகளை உடைத்து, கிராமத்து வாசனையை, அதே புழுதி மண்ணோடு பேசிய படமாக வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
சப்பாணியாக கமலும் பரட்டையாக ரஜினியும் மயிலுவாக ஸ்ரீதேவியும் வாழ்ந்திருந்தனர். இப்படம் மூலம் ஸ்டூடியோக்களில் அடைபட்டு கிடந்த சினிமாவை தென்மாவட்டக் கிராமங்களுக்குக் கொண்டு சென்று பெருமைச் சேர்த்தார் பாரதிராஜா.
தமிழ் மண்ணின் வாழ்க்கையை அதன் இயல்போடு பேசிய ‘16 வயதினிலே’, தமிழ் சினிமாவில் ‘கல்ட்’ அந்தஸ்தைப் பெற்றதுடன் இன்றுவரை மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
சிவப்பு ரோஜாக்கள்
இதையடுத்து பாரதிராஜா இயக்கிய திரைப்படம் ‘கிழக்கே போகும் ரயில்’ (1977). இதில் சுதாகரும் ராதிகாவும் அறிமுகமானார்கள். கிராமத்துக் காதலை, அதன் வாழ்க்கையை, யதார்த்தங்களோடு பேசிய இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது.
இந்தப் படங்களின் வெற்றி, பாரதிராஜாவுக்கு கிராமத்து கதைகளைத்தான் இயக்கத்தெரியும் என்ற விமர்சனத்தைக் கொடுத்தன. அதை மாற்ற வேண்டும் என்று அவர் இயக்கிய திரைப்படம், ‘சிவப்பு ரோஜாக்கள்’.
மேற்கத்திய ஸ்டைலில் பெண்களை வெறுக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனின் கதையாக இதை இயக்கினார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இப்படமும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து, ‘புதிய வார்ப்புகள்’ (1979), ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979), ‘நிழல்கள்’ (1980), ‘டிக் டிக் டிக்’ (1981), ‘காதல் ஓவியம்’ (1981), ‘வாலிபமே வா வா’ (1982) என வெவ்வேறு ஜானர் திரைப்படங்களை அவர் இயக்கினார்.
1980-களில் வெளிவந்த ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’ (1982), புதுமைப்பெண் (1984), ‘ஒரு கைதியின் டைரி’ (1984), ‘முதல் மரியாதை’ (1985), ‘கடலோர கவிதைகள்’ (1986) என வலுவான திரைக்கதையுடன் அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் இப்போதும் பேசப்படுகின்றன.
சாதிய பாகுபாடு குறித்து ஆழமாகப் பேசியத் திரைப்படம், ‘வேதம் புதிது’ (1987). இதில் பாரதிராஜாவின் தனித்துவமான பாணியும், இதில் இடம்பெற்ற புதுமையான காட்சிகளும் பார்வையாளர்களிடையே பாராட்டைப் பெற்றன.
‘கொடிபறக்குது’, ‘என்னுயிர் தோழன்’ (1990), ‘புதுநெல்லு புது நாத்து’ (1991), ‘நாடோடி தென்றல்’ (1992), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), பெண் சிசுக்கொலையை பேசிய ‘கருத்தம்மா’ (1994) என அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் அவருடைய தனித்துவத்துக்காகக் கவனிக்கப்பட்டன.
சுமார் 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள அவர், தமிழில் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கிலும் இயக்கி இருக்கிறார்.
சின்னத்திரை தொடர் திரைப்படங்களில் முத்திரைப் பதித்த பாரதிராஜா, தெக்கத்திப் பொண்ணு, அப்பனும் ஆத்தாவும், முதல் மரியாதை உள்பட சில சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார். அவருடைய படங்களில் பலருக்கு பின்னணி குரலும் பேசியுள்ளார்.
நடிகராகவும் ஜொலித்தார்
இயக்குநர் பாரதிராஜா, ‘கல்லுக்குள் ஈரம்’ (1980) திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அவர் அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தபோதும் தொடர்ந்து திரைப் படங்களில் நடிக்கவில்லை.
பின்னர் மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். ‘ரெட்டச்சுழி’, ‘பாண்டியநாடு’, ‘குரங்கு பொம்மை’, ‘திருச்சிற்றம் பலம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள்
தமிழ் சினிமாவில் அதிக புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. அவர் தனது கதாநாயகிகளுக்கு ‘ர’ வரிசையில் பெயர்களையும் வைத்தார். பிரியாமணி, சுகன்யாவுக்கு மட்டும் அவர் பெயரை மாற்றவில்லை.
நடிகைகள்: ராதிகா சரத்குமார், (கிழக்கே போகும் ரயில்), ராதா (அலைகள் ஓய்வதில்லை), ரேவதி (மண்வாசனை), ரேகா (கடலோரக் கவிதைகள்), ரஞ்சிதா (நாடோடித் தென்றல்), பிரியாமணி (கண்களால் கைது செய்), ரமா (என்னுயிர் தோழன்), சுகன்யா (புதுநெல்லு புது நாத்து).
நடிகர்கள்: கார்த்திக் (அலைகள் ஓய்வதில்லை), பாண்டியன் (மண்வாசனை), நெப்போலியன் (புதுநெல்லு புது நாத்து), சுதாகர் (கிழக்கே போகும் ரயில்), மனோஜ் பாரதிராஜா (தாஜ்மஹால்), ரவி (நிழல்கள்), வடிவுக்கரசி (சிகப்பு ரோஜாக்கள்), சந்திரசேகர் போன்ற பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர் இவர்.
1981-ம் ஆண்டு தெலுங்கில் இயக்கிய ‘சீதாகோக சிலுகா’ (அலைகள் ஓய்வதில்லை ரீமேக்) திரைப்படம் சிறந்த தெலுங்குத் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ‘முதல் மரியாதை’, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
‘வேதம் புதிது’, சமூகப் பிரச்சினைகளை அலசும் சிறந்த படத்துக்கான விருதை வென்றது. பெண் சிசுக்கொலையைப் பேசிய ‘கருத்தம்மா’, குடும்ப நலனை வலியுறுத்தும் சிறந்தப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.
‘அந்திமந்தாரை’ சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ‘கடல் பூக்கள்’ படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பாரதிராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இதே போல தமிழக அரசின் 6 விருதுகளையும் பெற்றுள்ளார். திரைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2004-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிக் கவுரவித்தது.
‘என் இனிய தமிழ் மக்களே...’
பாரதிராஜா பேசத் தொடங்கும்போது ‘என் இனிய தமிழ் மக்களே’ என்றுதான் தொடங்குவார். அவர் திரைப்படங்களின் தொடக்கத்திலும் இப்படி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவருடைய இந்த கணீர் குரல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக மாறிப்போனது. அவர் அப்படிச் சொல்லும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம்.
படப்பிடிப்பு இன்று ரத்து
பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இன்று ஒரு நாள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்து உள்ளார்.