TN 2026: திரைப் பார்வை - ‘அடுத்த எம்.ஜி.ஆர்’ ஆசையின் அதிரடி முடிவு!

TN 2026: திரைப் பார்வை - ‘அடுத்த எம்.ஜி.ஆர்’ ஆசையின் அதிரடி முடிவு!
Updated on
2 min read

தமிழ் சினிமாவிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் ‘அடுத்த எம்.ஜி.ஆர்’ என்கிற நாற்காலி என்பது காலியாகவே இருக்கும் ஒன்று. ஆனால் அதையொரு மியூசிக்கல் சேர் என்று நினைத்து, அதில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட, வட மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழைப் பிழையாகவே பேசி வளர்ந்த குல்கந்த் குமாரை (நட்டி நடராஜ்) இழுத்துப் போட்டு உட்கார வைக்க முயலும் ரசிகர் கூட்டத்தின் முயற்சியை வயிறு வலிக்கும் நையாண்டி நகைச்சுவை தெறிக்க விவரிக்கிறது இந்த ‘TN 2026’.

வடநாட்டில் பிறந்து வளர்ந்த குல்கந்த் குமார், எதிர்பாராத விதமாக ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாகி, பேசும் வசனங்களின் வழியாகத் தமிழைக் கொலை செய்கிறார். அவருடைய பிழையான தமிழ் வசன உச்சரிப்பு எடுத்த எடுப்பிலேயே தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று விடுகிறது. குல்கந்த் குமாரைப் பார்த்த மாத்திரத்திலேயே, “அட, நம்ம வாத்தியார் சாயல் அப்படியே இருக்கே!” என உருகுகிறார் மக்கள் திலகத்தின் வெறிகொண்ட ரசிகரான 1000 ஏக்கர் தோப்புகளைச் சொத்தாகக் கொண்டிருக்கும் பண்ணையாரான மன்றாடியார் (தம்பி ராமையா).

ஒரு பிடி நிலத்தைக் கூட விற்காத மன்றாடியார் தன் தோப்புகளை விற்று நட்டியை ஒரு வெற்றிகரமான பாக்ஸ் ஆபிஸ் நட்சத்திரமாக மாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக குல்கந்தை அடுத்த எம்.ஜி.ஆர். ஆக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக்கச் சபதம் ஏற்கிறார். அதற்கான உள்ளடி வேலைகளைச் செய்து அவரை அரசியலிலும் இழுத்துவிடுகிறார். 2026-ல் குல்கந்த் குமார்தான் முதல்வர் என மன்றாடியார் கனவு கண்டுகொண்டு இருக்கும்போது குல்கந்த் குமார் என்ன முடிவு எடுத்தார் என்பது கதை.

படத்தின் பலம் தம்பி ராமையாவின் கதையும் வசனமும். இப்படியொரு கதையை யாருடைய மனம் புண்படாமல் எழுதியிருப்பதுதான் அவருடைய திரைக்கதை மேதைமை. தன்னுடைய அப்பாவின் எழுத்து சாகசத்தை அணுவணுவாகப் புரிந்துகொண்டு அவருடைய மகன் உமாபதி ராமையா எழுதியிருக்கும் விறுவிறு திரைக்கதையும் காட்சிகளையும் ஆக்‌ஷன் காட்சிகளையும் எக்ஸியூக்யூட் செய்திருக்கும் விதமும் அதைவிட அட்டகாசம்!

பொதுவாக ஒரு அரசியல் நையாண்டித் திரைப்படம் எடுக்கும்போது அதில் குறிப்பிட்ட ஒருவரை நினைவுபடுத்தாமல், ஒட்டுமொத்தமான அரசியல் போக்கை நினைவுக்குக் கொண்டுவந்து சிரிக்க வைப்பதுடன், அரசியலில் கோமாளிகளாகக் கடந்த காலத்தில் சம்பவம் செய்த, செய்துகொண்டிருக்கும் பிரபலங்களை ஒப்பிட்டுப்பார்த்து உண்மையாகவே சிரிக்க வைக்க வேண்டும். இந்த அளவுகோலில், இந்தப் படம் இரண்டு ‘அமைதிப்படை’ என்பது மட்டுமல்ல; எல்லாக் காட்சிகளிலும் வஞ்சனையில்லாமல் சிரிக்க வைக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகன் நட்டி நட்ராஜ் தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தின் பரிமாணங்களை உணர்ந்து, சமகால அரசியல் மற்றும் சினிமா தயாரிப்பில் கொட்டிக்கிடக்கும் அசலான நையாண்டி நகைச்சுவைக் களத்தின் பொருத்தப்பாட்டைப் புரிந்துகொண்டு ‘ஸ்பெல்பவுண்ட் பெர்ஃபார்மென்ஸ்’ கொடுத்திருக்கிறார். அவர் ‘குல்கந்த் குமார்’ என்கிற பெயர் தனக்கு எப்படி வைக்கப்பட்டது என்று சொல்கிற பெயர்க் காரணத்தில் தொடங்கி, அவர் படப்பிடிப்பில் வசனம் பேசும் முறை, கட்சிக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பதிலளிக்கும் முறை என்று வரும் காட்சிகள் அத்தனையிலும் அப்ளாஸ்களை அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்.

சொந்த மண் என்ற உரிமையுடன் பிழைப்புக்கு வழி தேடி வந்து எதிர்பாராமல் கதாநாயகன் ஆவதும், முதல் படத்தில் படும் சிரமங்கள், அவர் நடிக்கும் கண்ணீர் காவியங்களை ரசிக்க விரும்பாத மக்கள், அடுத்தவனையும் பெற்ற அன்னையையும் துன்புறுத்தும் கதைகளில் கொண்டாடுவதெல்லாம் இன்றைய அவிந்துபோன சினிமா ரசனையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. நடிப்பைப் பொறுத்தவரை குல்கந்த் குமார் என்கிற பல நடிகர்களின் கலவையை நட்டி தன் உடல்மொழியில் கொண்டு வந்து காட்டுவது அட்டகாசத்தின் உச்சம்!

மன்றாடியாராக வந்து குல்கந்த் குமாரின் வழிகாட்டியாக, கிங் மேக்கராக தம்பி ராமையா நகைச்சுவை நடிப்பில் தன் முந்தைய முத்திரைகளைப் பின்னுக்குத் தள்ளி பட்டையைக் கிளப்புகிறார். குல்கந்த் குமாரை முதல்வராக மாற்ற இவர் போடும் திட்டங்கள் எல்லாம் திரையரங்கில் சிரிப்புச் சரவெடி.

தம்பி ராமையாவுடன் ஒப்பிடும்போது எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இளவரசு இருவருக்கும் முக்கியத்துவம் குறைவாக இருந்தாலும் அவர்கள் தரவேண்டிய விளைவைச் சரியான அளவில் கொடுத்திருக்கிறார்கள்.

பெரும்பாலான துணைக் கதாபாத்திரங்களுக்குத் திரைக்கதையில் கச்சிதமான இடமளித்திருந்தாலும் ஷெரிட்டா ராவ், ஸ்ரீஜா ரவி ஆகிய இருவரையும் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா பழைய காலத்து பிளாஷ்பேக் காட்சிகளுக்கு ரெட்ரோ லுக் கொடுத்திருப்பதும் தற்போதைய அரசியல் களத்தை இயல்பாகக் காட்டியிருப்பதும் நன்று. தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் எதுவும் கவரவில்லை. ஆனால் இசையை ரசிக்கும் அளவுக்குச் சமகால அரசியல் சினிமா ‘ஸ்பூப்’ களம் வாய்ப்புக் கொடுக்காமல் சிரிக்க வைப்பதிலேயே நம் மொத்த கவனத்தையும் இழுத்துக்கொள்கிறது.

விளைவாகப் புரட்சி நாயகனாக குல்கந்த் குமாரை எதிர்பார்க்காமல் ஒரு நாயகன் எவ்வாறெல்லாம் தன் வாழ்க்கையை வாழ நினைக்கிறான், அவனை வைத்து லாபம் அடைய நினைப்பவர்கள் எப்படிப்பட்ட ஆட்டத்தையெல்லாம் ஆடுவார்கள் என்பதையும் அவர்களுக்கு குல்கந்த் எப்படியான மகிழ்ச்சியைக் கொடுப்பார் என்பதை எதிர்பார்த்துச் சென்றால், தேர்தல் நேரத்தில் இது ஒரு கேரண்டியான நையாண்டித் தாக்குதல் என்பதை உணர்ந்து ரசிக்கலாம்.

TN 2026: திரைப் பார்வை - ‘அடுத்த எம்.ஜி.ஆர்’ ஆசையின் அதிரடி முடிவு!
LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in