எனது ஈகோ உடைந்த தருணம்! - ரஜினியின் ஆசிரம அனுபவப் பகிர்வு

எனது ஈகோ உடைந்த தருணம்! - ரஜினியின் ஆசிரம அனுபவப் பகிர்வு
Updated on
2 min read

நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள வாழும் கலை ஆசிரமத்தில் 15 நாட்கள் தங்கியிருந்தபோது தனது ஈகோ உடைந்த தருணத்தை அனுபவப் பகிர்வாகப் பேசியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ளது ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 'ஆர்ட் ஆஃப் லிவிங்' (Art of Living) சர்வதேச மையம். இந்த ஆன்மிக மையத்தில் 45-வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 70-வது பிறந்தநாளை ஒட்டி நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசுகையில், “நான் இந்த ஆசிரமத்தில் 2 நாட்கள் தங்கலாம் என்று நினைத்தே வந்தேன். ஆனால் இங்குள்ள இயற்கை எழில், இங்குள்ளோரின் முகங்களில் நிலவும் மகிழ்ச்சி, ஏன் யானை, குதிரைகள், பசுக்கள் முகங்களில் கூட நிலவும் அமைதி என எல்லாம் சேர்ந்து என்னை இங்கு 15 நாட்கள் தங்கவைத்துவிட்டது. இங்கே இரண்டு குதிரைகள் இருக்கின்றன. அதில் ஒன்றின் பெயர் ரஜினி. இமாலயத்துக்குப் பின்னர் நான் இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த போது மிகவும் மகிழ்ந்திருந்தேன்.

ஒரு நாள் குருதேவ் என்னிடம், “நான் தரிசன உலா செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?” என்றார். நான் அதற்கு, ”குருதேவ், நான் உங்களுடன் வந்தால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும். நிறைய பேர் அங்கே இருப்பார்கள்” என்றேன்.

நிறைய மக்கள் இருப்பார்கள். அவர்களை என்னைப் பார்த்து ரஜினி, ரஜினி என்று ஆர்ப்பரிப்பார்கள். என்னுடன் புகைப்படம் எடுக்கக் கூடுவார்கள். ஆட்டோகிராஃப் கேட்பார்கள் என்று நினைத்தே நான் வேண்டாம் என்றேன். ஆனால், “ஒரு இடையூறும் இருக்காது” என்று கூறி குருதேவ் என்னைக் கூட்டிச் சென்றார்.

குருதேவுடன் சென்றபோது அவர் சொன்ன மாதிரியே எந்த இடையூறும் ஏற்படவில்லை. அங்கே நிறைய பேர் இருந்தனர். அங்கே என்னை நன்கறிந்த தமிழர்களும் கூட இருந்தனர். ஆனால் ஒரே ஒருவர் கூட என்னை ஏறிட்டுப் பார்க்கவில்லை. நான் தான் எல்லோரையும் பார்த்து கையசைத்தேன். நான் என் வாழ்வில் நிறைய அரசியல்வாதிகள், பெரிய பெரிய தொழிலதிபர்களை யெல்லாம் சந்தித்திருந்தாலும், அன்று ஆசிரமத்தில் நான் சந்தித்த மக்களால் எனது ஈகோ உடைந்து நொறுங்கியது.

அந்த உலா முடிந்து தங்குமிடத்துக்கு நாங்கள் திரும்பியதும் குருதேவ், ”எந்தத் தொந்தரவும் இல்லையே” என்று என்னிடம் கேட்டார். நான் அவரைப் பார்த்து கைகூப்பிக் கும்பிட்டேன். உண்மையிலேயே எனது மனம் கலங்கிப் போனது. அதுதான் ஆன்மிகத்தின் ஆற்றல். நட்சத்திர அந்தஸ்து என்பது எப்போது வேண்டுமானாலும் வந்து போகும். குறிப்பிட்ட சில காலம் நம்முடன் தங்கியும் இருக்கும். ஆனால், குருதேவின் நட்சத்திர அந்தஸ்து உன்னதமானது. அது மறைவுக்குப் பின்னரும் நீடிக்கும், பன்மடங்கு அதிகரிக்கும்.” என்று ரஜினிகாந்த் பேசினார்.

இன்றளவும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், ஆசிரமத்தில் நிகழ்ந்த சம்பவம் தனது ஈகோவை நொறுக்கியதாக பேசியது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

எனது ஈகோ உடைந்த தருணம்! - ரஜினியின் ஆசிரம அனுபவப் பகிர்வு
‘ரஜினி 173’ இயக்குநர் யார்? - நீடிக்கும் குழப்பம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in