

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ள இப்படம் ஏப்.10-ம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் விக்னேஷ் சிவன் பேசும்போது, ” இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். இந்தப் படத்தின் ஒரு ஃப்ரேம் கூட எளிதாக எடுத்துவிட முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் காஸ்ட்யூம், செட், விஎஃப்எக்ஸ், மேக்கப், வசனம் என எல்லாமே சரியாக இருக்கவேண்டும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன.
இந்தப் படம் காதல் கதை. ஆனால் வழக்கமான ‘மெலோட்ராமா’ வாக இல்லாமல், புதிய அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி திரையரங்கத்தில் கைதட்டலாக மாறும் போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. இந்தப் படம் நடக்கக் காரணம் பிரதீப்தான். இப்படம் நீண்ட காலம் ஓடும் என நம்புகிறேன். விரைவில் ரூ. 100 கோடி கிளப்பில் சேரும் என நம்பிக்கையோடு சொல்கிறேன்” என்றார்.