

சென்னை: புதிதாக புழக்கத்தில் உள்ள 22 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிதாக புழக்கத்துக்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பொது மக்களுக்கு வழங்குவதற்காக `சொல் புதிது' எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் 14-வது கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சிக் கழக தலைவர் ம.ராசேந்திரன் தலைமை வகித்தார். இதில் பேராசிரியர்கள் மு.ராமசாமி, இளங்கோவன், தி.கமலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 22 பிற மொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் முடிவு செய்யப்பட்டன.
அதன்படி, வெஜிடேரியன் ஹோட்டல் - காய்கறி உணவகம், நான் வெஜிடேரியன் ஹோட்டல் - மீன்கறி உணவகம், பைக் ரைடு - உந்துருளிப் பயணம், பைக் டூர் - உந்துருளி உலா, பைக் டாக்ஸி- வாடகை உந்துருளி, ஹேண்ட் பேண்டு - கைப்பட்டை, கம்யூனிட்டி வில்லா பிளாட் - சமூகச் சீர்மனை, டி லிமிடேஷன் - மறு வரையறை, டிஜிட்டல் ஹப் - மின்னணு இணைய மையம், ப்ரீ பையோட்டிக் - நன்னுயிரூட்டி, ரிவ்யூ ஆப் ரிலேட்டட் லிட்ரேச்சர் - முன் ஆய்வுப் பார்வை, சென்ஸ் ஆப் செர்னிடி - ஆழ்மன அமைதி,
யுனிக் பேமெண்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) - தனித்த பணம் வழங்கிடை முகம், பெரி அர்பன்- புறநகர், ஸ்டேண்ட் அப் காமெடி - தனி நபர் நகைச்சுவை, பிளாக் காமெடி - கருங்கூத்து நகை, ஸ்கெட்ச் காமெடி- சித்திரக் குறுநகை, சர்ரியல் காமெடி- இயல் மிகை நகை, கிரிஞ்ச் காமெடி- கடி நகை, ப்ரீ பயோட்டிக் அட்மாஸ்ப்பியர்- உயிர் முன்வளி மண்டலம், பப் - மயக்க மையம் ஆகிய பிற மொழி சொற்களுக்கான வார்த்தைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.