தமிழ் சினிமா 2025 - வியத்தகு படைப்புகள் என்னென்ன?

தமிழ் சினிமாவில் 2025-ம் ஆண்டு பிரம்மாண்டமாக முன்னிறுத்தப்பட்ட பல படங்கள் பல்லிளித்தன. ‘வசூல்ரீதியில் வெற்றி’ என்கிற முத்திரை குத்தப்பட்ட படங்கள் ரசிகர்கள், விமர்சகர்களை ஈர்க்கவில்லை. மனிதர்களை, கதையை மையப்​படுத்திய சிறிய பட்ஜெட் படங்கள் ஆச்சரிய வரவேற்​பையும் வெற்றியையும் பெற்றன. தமிழ் சினிமா மெல்லப் புதிய​வர்கள் கைக்குச் சென்று​வருவதன் அறிகுறியாக இதைக் கருதலாம்.

அபிஷன் ஜீவிந்த் என்கிற 25 வயது இயக்குநரின் முதல் படம் ‘டூரிஸ்ட் பேமிலி’, இந்த ஆண்டின் எதிர்​பாராத வெற்றிப் படமாக பேசப்​படு​கிறது. நிஜத்திலிருந்து உத்வேகம் பெற்று, தான் முன்னிறுத்த, முன்மொழிய விரும்பும் கருத்தை, மாற்றத்தைக் கற்பனை கலந்து எழுத்​துபூர்வப் படைப்புகள் கூறுகின்றன. அதுபோல் இந்தப் படமும் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும், மனிதர்கள் எதைத் தொலைத்து​விட்​டார்கள் என்கிற மதிப்​பீடுகளை முன்வைக்​கிறது.

இயக்குநர் ராம் தனது வழக்கமான பாதையில் ​இருந்து சற்றே விலகி நகைச்சுவை கலந்து, மிர்ச்சி சிவாவையும் சிறுவன் மிதுல் ரியானையும் வைத்து ‘பறந்து போ’ எடுத்​திருந்​தார். தற்கால நடுத்தர வர்க்​கத்தின் முக்கியப் பிரச்சினைகளை, குழந்தை​களைப் பின்னணியாக வைத்துப் பேசியிருந்​தார்.

திரைக்கதை எழுத்​தாளரான மணிகண்டன் நடிகராகத் தேர்வுசெய்யும் படங்கள் முற்றிலும் வித்தி​யாச​மானவை. நம் சமூகத்​துக்கு அவசியம் தேவைப்​படுபவை. அந்த வரிசையில் யூடியூப் பின்னணியைக் கொண்ட ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் அவர் நடித்த ‘குடும்​பஸ்தன்’ ஒரு மாறுபட்ட வரவு. சாதி மறுப்புக் காதல் திருமணம் செய்த ஒரு நடுத்​தர​வர்க்க தம்பதி குடும்பத்​திலும் பொருளா​தா​ரரீ​தி​யிலும் எதிர்​கொள்ளும் நெருக்கடிகளை நகைச்​சுவை​யாகப் பேசியிருந்தது. நடுத்​தர ​வர்க்கம் தன் சுயமரி​யாதையை இழந்து எதையும் பெற வேண்டிய அவசியமில்லை என்பதை அழுத்​த​மாகக் கூறியிருந்தது.

‘மெட்ராஸ் மேட்னி’, ‘பாம்’ ஆகிய இரண்டு படங்களும் சாதாரண​மாகக் கடந்து செல்லும் மனிதர்​களின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளை நாம் பார்க்காத கோணங்​களில் இன்னும் நெருக்கமாக அணுகின. மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிஜக் கதையில் இருந்து உத்வேகம் பெற்று, ஒரு காலக்​கட்​டத்தின் சித்தரிப்பாக நிலத்தில் வேர் கொண்டு வலுவாக எழுந்து நின்றது ‘பைசன் - காளமாடன்’.

‘ஆட்டோகி​ராப்’ போன்ற படத்தை ஒரு பெண் எடுக்க முடியுமா என்கிற கேள்வி இருந்தது. அதற்குப் பதிலளித்​திருக்​கிறார் வர்ஷா பரத். பதின்​வயதில் தொடங்கி ஓர் இளம்பெண்ணின் அகப்போ​ராட்​டங்களை ‘பேட் கேர்ள்’ நிதர்​சன​மாகக் கூறுகிறது. சடங்குகள், புனிதங்கள், கட்டுப்​பாடுகள் என்கிற பெயரில் குடும்பமும் சமூகமும் ஒரு பெண்ணை எப்படி மோசமாக ஒடுக்கு​கின்றன, ஒருவருடன் மட்டும் தோன்றும் புனிதம் கொண்டதா காதல், ஒரு பெண்ணின் இயல்பு எப்படி​யெல்லாம் முடக்​கப்​படு​கிறது என்பதைத் தைரியமாக, இயல்பான திரைமொழியில் அலசியுள்ளது.

ஆண்டின் இறுதியில் வெளிவந்து நிறைவான அனுபவத்தை தந்துள்ளது ‘சிறை’. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் விளிம்புநிலை மக்கள் எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட திரைக் களத்தில், விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவத்தையும் தருவது சிறையின் மற்றொரு சிறப்பு.

தேய்ந்துபோன வழக்கமான பாதையில் நடப்பது எளிது, யாரும் இன்னும் கால் பதிக்காத பாதைகளில் நடப்பது கடினம். அந்தப் புதிய பாதையில் சில தப்படிகளை முன்வைத்து இந்தப் படங்கள் நடக்கத் தொடங்​கி​யுள்ளது ஒரு நல்ல அறிகுறி. - ஆதி வள்ளியப்பன்

தமிழ் சினிமா 2025 - வியத்தகு படைப்புகள் என்னென்ன?
2025-ல் இந்திய அரசியல் அதிர்வுகள் எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in