‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம்: டி.ராஜேந்தர் காட்டம்

‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம்: டி.ராஜேந்தர் காட்டம்
Updated on
2 min read

‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக டி.ராஜேந்தர் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் சிம்பு - வேல்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்புக்கு பெப்சி அமைப்பு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசனுக்காகவோ, சிலம்பரசனுக்காகவோ வாதாடுவதற்காக நான் வரவில்லை. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், அதற்கு துணையாக நிற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும் அறம் தவறி நடந்துவிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே நான் வருகின்றேன்.

ஆம் சிலம்பரசன் நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிலம்பரசனுக்கு எதிராக அவர் வழக்கு மன்றத்துக்கு சென்றார். வழக்கு தொடுத்தார். அந்த வழக்கிலே சிலம்பரசன் சார்பாக சட்டப்படி உரிமை பெற்ற, அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியாக நான் வழக்கு மன்றத்திற்கு சென்று நீதிமன்றத்திற்கு முன் நின்று போராடி முறைப்படி வென்றும் வந்திருக்கின்றோம்.

அந்த வழக்கிலே மரியாதைக்குரிய நீதிமன்றம் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்துக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் சிலம்பரசனையே போய் சாரும் என்று ஒரு தீர்ப்பையும் வழங்கி இருக்கின்றார்கள். அந்த தீர்ப்புக்கான நகலும் எங்கள் கையிலே இருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த தருணத்திலே அந்தப் பழைய வழக்கை எடுத்து வைத்துக்கொண்டு நம்முடைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், அதற்கு துணையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமும் சேர்ந்து இன்றைக்கு ’அரசன்’ படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு செய்தி வருகிறது. இதை பார்க்கின்ற போது நான் கேட்க விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். ஒரு தயாரிப்பாளருக்காக போராடுவதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமும் நிற்கின்ற போது, ஒரு திரைப்பட நடிகருக்காக, போராடுவதற்காக தென் இந்திய நடிகர் சங்கமும் ஏன் நிற்கக்கூடாது? நிற்க வேண்டும். அவர்களும் போராட வேண்டும். உரிமையை பெற்று தரவேண்டும். நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஒரு சுமூகமான தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றேன்.

அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கக்கூடிய இந்த காலகட்டத்திலே நீதிமன்றத்தால் ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம். நீதிமன்றத்தால் ஒரு வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் சட்டத்தை எங்கள் கையிலே எடுப்போம். நாங்கள் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு படத்தை நிறுத்துவோம் என்று நிறுத்தி காட்டி இருக்கிறார்களே இது நியாயமா? என்று கேள்வி கேட்கவும் விரும்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘அரசன்’ படப்பிடிப்பு நிறுத்தம்: டி.ராஜேந்தர் காட்டம்
கோடை விடுமுறைக்கு வெளியாகும் விஷ்ணு விஷாலின் ‘இரண்டு வானம்’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in