சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சந்தீப் கிஷன். தற்போது அவரது நடிப்பில் பேன் இந்தியா படமொன்று உருவாகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை ‘சம்பாலா’ படத்தின் இயக்குநர் இயக்க, அதன் தயாரிப்பாளரே இயக்கவுள்ளார்.
தெலுங்கில் ‘சம்பாலா’ என்ற படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தை தயாரித்த சைனிங் பிக்சர்ஸ் மீண்டும் ‘சம்பாலா’ இயக்குநர் உகந்தர் முனி இயக்கவுள்ள படத்தினை தயாரிக்கவுள்ளது. இதில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் சந்தீப் கிஷன். இப்படத்தின் அறிவிப்புக்காக வெளியிடப்பட்ட போஸ்டர் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இப்படம் சோஷியல், ஃபேன்டஸி த்ரில்லர் பாணியில் உருவாகிறது. இதுவரை காணாத புதிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளார். அவரது திரையுலக வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இது அமையவுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் சந்தீப் கிஷன் உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.