

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம், ‘சோனி விழா’ என்ற பெயரில் தமிழில் புதிய பொழுது போக்கு சேனலை தொடங்க இருக்கிறது. தமிழ் கலாச்சாரம், மண்வாசனை கொண்ட கதைகள், இசை, உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையைக் கொண்டாட விரும்பும் பார்வையாளர்களுக்காக இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் சேனலின் பெயர் மற்றும் லோகோவை இந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்க உள்ள இச்சேனல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் அசல் தொடர்கள், உலகளாவிய ரியாலிட்டி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பிரமாண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதுபற்றி சோனி நிறுவன அதிகாரி ராஜாராமன் சுந்தரம் கூறும்போது, “புதிய தலைமுறை பார்வையாளர்களின் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மனதுக்கு நெருக்கமான தரமான கதைகளை உருவாக்க விரும்புகிறோம். அக்டோபரில் இந்த சேனலை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கக் காத்திருக்கிறோம்” என்றார்.