

சந்தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்ணாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘சிக்னல் அட் 11.30’. மலர்விழி நடேசன் இயக்கியுள்ள இப்படத்தை அவரும் ஷிவானி சுப்ரமணியும் தயாரித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் விதார்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் மலர்விழி நடேசன் பேசும்போது, “தனிப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் பிரச்சினைதான் கதை. எல்லோரும் சந்தித்திருக்கக் கூடிய சம்பவம் என்பதால் பார்வையாளர்கள் கதையுடன் ஒன்ற முடியும். இப்படத்துக்கு இசை மிக முக்கியம். இமான் சார் சிறப்பாக அமைத்திருக்கிறார். அவர் இசை படத்துக்குப் பெரிய பலம். சந்தோஷ், புஜிதா, பவ்யா என அனைவரும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.