

இயக்குநர், நடிகர், சிறந்த திரைக்கதையாசிரியர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட கே.பாக்யராஜின் எதிர்பாராத மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் சினிமாவில், ஒரு படத்துக்கு அழகான ஹீரோ, ஹீரோயின், அசத்தலான இசை உள்பட அனைத்தும் முக்கியம் என்று கருதப்பட்ட காலத்தில் திரைக்கதைதான் ஒரு படத்தின் உயிர் என்று அழுத்தமாகத் தனது படங்களின் மூலம் நிரூபித்து, சாதித்துக் காட்டியவர் கே.பாக்யராஜ்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் அவருடைய படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டிய பாக்யராஜை, தனது ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் ஹீரோவாக துணிச்சலாக நடிக்க வைத்தார் பாரதிராஜா.
ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழ் சினிமா போட்டு வைத்திருந்த வரைமுறைகளைக் கடந்து, மூக்குக்கண்ணாடி, அப்பாவியான முகம் போன்ற தோரணையில் களமிறங்கிய பாக்யராஜை, அந்தக்கால ரசிகர்களுக்கும் ரசிகைகளுக்கும் பிடித்துப் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், அந்தப் படத்தில் ஒரு தலைக்காதல், தனது காதலி படும் துன்பம், பொருளாதாரச் சிக்கல் என குடும்ப வறுமையை மிக இயல்பாகவும் எளிமையாகவும் சொல்லியிருப்பார். இந்தப் படம் வெற்றி பெற்று எல்லோரையும் கவனிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து, ‘ஒரு கை ஓசை’ படத்தில் வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியி ருப்பார்.
அடுத்தடுத்து அவர் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’ படங்களில் அப்பாவியான கதாபாத்திரங்களில் நடித்தாலும், அதை நகைச்சுவையோடு, அழகான மெசேஜையும் கதையில் புகுத்தி விடுவதில் வல்லவராக இருந்தார். அதுவே அவருடைய டிரேட் மார்க்காகவும், தனக்கான ரசிகர் பட்டாளம் உருவாவதற்கு காரணமாகவும் இருந்தது என்றால் மிகையல்ல.
அவரின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் கிளைமாக்ஸில் அவர் பேசும், “எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆயிட்டு வரும் சாரே... ஆனா, உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது சாரே” என்ற வசனமும் கிளைமாக்ஸும் இன்றுவரை பேசப்படுகின்றன. ‘மெளன கீதங்கள்’ படத்தில் அவருக்கும், மனைவியாக நடித்திருக்கும் சரிதாவுக்குமான காட்சிகளில் உணர்வுகள் பேசும் மவுனத்தை அட்டகாசமாகப் படமாக்கி இருப்பார் பாக்யராஜ். தனது குற்ற உணர்ச்சியையும் மனித மன உளவியலையும் அழகாகச் சொன்ன படங்களில் அதுவும் ஒன்று.
‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் திரைக்கதையும் அந்த காமெடி கிளைமாக்ஸும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, அன்றைய திரையுலகினரையே ஆச்சரியப்படுத்திய ஒன்று. அப்படியொரு துணிச்சலான கிளைமாக்ஸை யோசிக்க, குடும்பங்கள் கொண்டாடிய திரைக்கதை மன்னன் பாக்யராஜால் மட்டுமே முடியும். அதேபோல் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தாய்க்குலங்களின் ஆதரவை முற்றிலும் தனதாக்கிக் கொண்டார்.
மனைவியை இழந்த கணவன், கைக்குழந்தையுடன் படும் பாடுகளையும், இரண்டாம் திருமணம் செய்து கொண்டால், சித்தியால் தன் குழந்தைக்கு ஆபத்து நேருமோ என்ற அவருடைய மனப் போராட்டத்தையும் திரையில் காட்டிய விதம், பெண் ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டுவிட்டது.
அவருடைய படங்களில் ‘இது நம்ம ஆளு’ முக்கியமான ஒன்று. சாதி பாகுபாடு, சமூகத்துக்கு எதிரான கருத்துகளை கூர்மையான வசனங்கள் மூலம் விளாசியிருப்பார். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பாக்யராஜும், அவரது மாமனாராக நடித்திருக்கும் சோமயாஜுலும் பேசும் வசனங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்தன. நாயகனாக மட்டுமல்லாமல், வில்லனாகவும் முத்திரைப் பதித்திருக்கிறார் பாக்யராஜ்.
பி.வி.பாலகுரு இயக்கத்தில் ராஜேஷ் நடிகராக அறிமுகமான, ‘கன்னி பருவத்திலே’ படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதிய பாக்யராஜ்தான், அந்தப் படத்தின் வில்லனாகவும் கலக்கியிருப்பார். ஸ்டைலாக புகைப்பிடித்தபடி, வடிவுக் கரசியை நெருங்கும் காட்சிகளில் முந்தைய படங்களில் பார்த்த அந்த அப்பாவியா இவர்? என ஆச்சரியப்படுத்தியிருப்பார் பாக்யராஜ்.
நடிப்போடு இசை அமைத்தும் அசத்திய அவர், பாடல்களின் இனிமையிலும் தன்னை நிரூபித்துக் காட்டினார். சினிமா மட்டுமல்லாமல், பத்திரிகையாளராகவும் முத்திரைப் பதித்தவர் பாக்யராஜ். தான் நடத்திய ‘பாக்யா’ இதழின் கேள்வி - பதில் பகுதியில் குட்டிக் கதைகள் சொல்லி, வியக்க வைத்தவர்.
அந்தக் குட்டிக் கதைகளுக்காகவே அந்த இதழை ஆர்வமாக வாசித்தவர்கள் ஏராளம். இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட கே.பாக்யராஜ், சாதாரண கதையையும் சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் ரசிக்க வைத்தவர். ஒரு கதையை எங்கு ஆரம்பித்து, எப்படி சொல்வது என்பதில் கே.பாக்யராஜ் அசாத்திய திறமை கொண்டவர். அவருடைய திரைக்கதை உத்தி இளம் இயக்குநர்களுக்கு பாடமாக இருக்கின்றன.
தென்மாவட்டத்தில் இருந்து சினிமாவுக்காக சென்னை வந்தவர்களுக்கு பாரதிராஜா எந்த அளவுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தாரோ, அதேபோல் கொங்கு பகுதியில் இருந்து சினிமாவுக்கு வந்த பல இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் கே.பாக்யராஜ்.
நம்பிக்கைகளும் நட்சத்திரங்களும் ஒருபோதும் மறையாது சாரே!