

சூர்யா - ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘சீன்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிஎஸ்பி இன்பராஜின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் இந்த வீடியோவை ழகரம் ஸ்டூடியோஸ் தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘டிஎஸ்பி இன்பராஜ் இங்கே’ எனக் கூறி இந்த கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.
1.04 நிமிடங்கள் ஓடும் வீடியோவில், டிஎஸ்பி இன்பராஜ், சிபி என்கிற காவலரிடம் ‘யார் யாரைக் கொன்றது’ என விசாரிக்கிறார். அதற்கு அந்த காவலர், ‘அதைக் கண்டுபிடிக்கத்தான் நீங்க வந்திருக்கீங்க அண்ணா.. சார்..’ என்கிறார். அது கரோனா காலகட்டத்தில் நடந்த கொலை. அதனால், டிஎஸ்பி உட்பட கூடி நிற்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்கின்றனர்.
கொலை விசாரணைக்கு வந்தவர் போல் இல்லாமல் வேடிக்கையாக நடந்து கொள்கிறார் டிஎஸ்பி இன்பராஜ். இதற்கிடையில் களைந்த முடி, தாடியுடன் இன்னொரு சூர்யா கதாபாத்திரமும் வருவது எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.
இந்தக் காட்சிகளுக்கு பின்னணியாக அறிவு குரலில், ரெஸ்பெக்ட்டா என்ற பாடலும் ஒலிக்கிறது.
இந்தப் படத்தை ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ளனர். ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைந்து தயாரித்துள்ளார். ‘ஆவேசம்’ படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கி இருக்கும் படத்துக்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவும், அஜ்மல் சாபு படத் தொகுப்பும் செய்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுடன் பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கெனவே நஸ்லென் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த கிளிம்ஸ் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது.