

“மக்கள் என்னை கதாநாயகனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அந்த விருப்பத்தை உடைக்க விரும்பவில்லை. கலகலப்பான வில்லனாக இருந்தால் முயற்சி செய்யலாம்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் 11-வது ஆண்டு விழா நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, சினிமாவில் கிடைக்கும் ஊதியம், சின்னத்திரையில் கிடைக்காததால் சினிமாவுக்குச் சென்றதாக சொன்ன சிவகார்த்திக்கேயன், இன்று தனக்கு கிடைத்திருக்கும் அனைத்துக்கும் சின்னத்திரையில் கிடைத்த வாய்ப்புகளும், அதை செயல்படுத்தியதுமே காரணம் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து, மூத்த செய்தியாளர்களுடன் நடந்த உரையாடல் நிகழ்வில் தனது சினிமா பயணம் குறித்து பதில் அளித்துக் பேசிய சிவகார்த்திக்கேயன், “சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. சின்னத் திரையில் கிடைத்த வரவேற்பை, அன்பை நான் மதிக்க வேண்டும் என்பதால், கிடைத்தை எல்லாம் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
அப்போது பாண்டியராஜன் சார், தயாரித்து இயக்கும் படத்துக்காக கதாநாயகன் தேடுகிறார் என அறிந்து, அந்த ஆடிஷன் சென்றேன். தேர்வாக மாட்டோம் என்றுதான் அங்கு சென்றேன். அதில் தேர்வானது மட்டும் இல்லாமல், இன்ப அதிர்ச்சியாக இயக்குநர், ‘நல்லா இருக்கு சிவகார்த்திக்கேயன், நாளைக்கு காலையில் ஷூட்டிங், மெரினா பீச் வந்துருங்க’ன்னு சொல்லிவிட்டார்.
என்னால் அதை நம்பமுடியவில்லை. படத்தின் போஸ்டர் வரும் வரை நான் வீட்டில் கூட படத்தில் நடிப்பதைச் சொல்லவில்லை. ஒரு முயற்சியாக ஆரம்பித்த இந்தப் பயணம் இவ்வளவு தூரம் வந்துள்ளது.
குடும்பமாக என்னை ரசிப்பது சின்னத்திரையில் இருந்து ஆரம்பித்துவிட்டது என நினைக்கிறேன். படங்களிலும் அதையே தொடர விரும்புகிறேன். இப்படித்தான் எனது படங்களுக்கான ஒரு ஃபார்முலா உருவாகிவிட்டதாக நம்புகிறேன்.
நான் சூப்பர் ஸ்டாரின் தீவிரமான ரசிகன். அவரைப்போல எல்லோரும் ரசிக்கும்படியான படங்கள் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். குழந்தைகள் என்னை ரசிப்பது எல்லாம் ஆசிர்வாதம்தான்.
என்னை நாயகனாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அந்த நம்பிக்கையை உடைக்க விரும்பவில்லை. எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என் மனதில் இருக்கிறது. நான் செய்யும் கதாபாத்திரங்களில் மக்களை மகிழ்விக்க என்ன செய்யமுடியும் என்றுதான் பார்க்கிறேன்.
வில்லனாக நடிக்க முடியும் என நான் இன்னும் யோசிக்கவில்லை. கலகலப்பான வில்லனாக, இரட்டை வேடங்களில் ஒன்றாக இருந்தால் முயற்சிக்கலாம்” என்று சிவகார்த்திக்கேயன் தெரிவித்தார்.