

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்காக நடிகை நயன்தாராவுக்காக வைக்கப்பட்டுள்ள 60 அடி கட் அவுட் குறித்து நடிகை ரெஜினா கஸண்ட்ரா தனது பிரமிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்றப் படம் ‘மூக்குத்தி அம்மன்’. அம்மனாக நயன்தாரா நடித்திருந்த இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே. சரவணன் இணைந்து இயக்கி இருந்தனர். அதேபோல் இந்தாண்டு (2026) தீபாவளிக்கு களம் காண இருக்கிறது ‘மூக்குத்தி அம்மன் 2’ படம். இம்முறையும் நயன்தாரா அம்மனாக நடித்திருக்கும் இந்தப் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.
தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரைக்கு வர இருக்கிறது இந்தப் படம். படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், படத்துக்காக வேல்ஸ் திரையரங்கில் மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கு 60 அடியில் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை படத்தில் நடித்திருக்கும் ரெஜினா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, நயன்தாராவுக்கான நட்சத்திர அந்தஸ்தை வியந்து பாராட்டியுள்ளார்.
தனது பதிவில் ரெஜினா, ‘இந்தநாள் வரலாற்றில் பதிவாகப் போகிறது. தமிழகத்தில் படம் வெளியாவதற்கு முன்பு ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது நயன்தாராவுக்குதான் என என்னிடன் சொல்லப்பட்டது. உண்மையிலேயே இது 60 அடி உயர சாதனை.
இதை வெற்றிக்கான மனஉறுதி, அதற்கான வெளிப்பாடு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். இது போற்றத்தக்கது. நான் பிரமித்துப் போனேன்’ என்று தெரிவித்துள்ளார்.
‘மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி’ படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். அவருடன் கன்னட நடிகர் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகி பாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருக்கிறார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கின்றனர். ‘மூக்குத்தி அம்மன் 2 - மஹாசக்தி’ படம் நவம்பர் 6-ம் திரைக்கு வருகிறது.