

2025-ம் ஆண்டு அதிக திரைப்படங்களுடன் அதிக இயக்குநர்களும் அறிமுகமாகி இருக்கிறார்கள். அதில் நம்பிக்கைக்குரிய வரவுகள் லிஸ்ட்டில் சில இயக்குநர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
அபிஷன் ஜீவிந்த்
அபிஷன் ஜீவிந்த்: ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மூலம் அறிமுகமாகி இருக்கும் அபிஷன் ஜீவிந்த் 2025-ல் அதிகம் கவனிக்கப்பட்ட அறிமுக இயக்குநர். சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இப்படம், மனதைத் தொடும் விதமாகவும் நகைச்சுவையாக இறுதிவரை ஆர்வத்துடன் பார்வையாளர்களை ஈர்த்தது. இப்போது அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்' என்ற படம் மூலம் ஹீரோவாகி இருக்கிறார்.
சுரேஷ் ராஜகுமாரி: டிசம்பர் மாதம் வெளியான ‘சிறை’ மூலம் அறிமுகமாகி இருக்கும் சுரேஷ் ராஜகுமாரி இயக்குநர் வெற்றிமாறனிடம் சினிமா பயின்றவர். ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை விக்ரம் பிரபு, அக் ஷய் குமார், அனிஷ்மா உள்ளிட்டோர் நடிப்பில் ‘சிறை’ படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார் அவர்.
டி.ராஜவேல்: தர்ஷன், காளி வெங்கட், வினோதினி வைத்யநாதன் நடித்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தை டி.ராஜவேல் அருமையாக இயக்கி இருந்தார். ஃபேன்டஸி ஹாரர் காமெடி படமான இது பார்வையாளர்களை சுவாரஸ்ய உலகுக்குக் கொண்டு சென்றது.
கார்த்திகேயன் மணி: வாழ்க்கை முழுவதும் உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு மிடில் கிளாஸ் அப்பாவின் வாழ்க்கையை நெகிழ்ச்சியாகச் சொன்ன திரைப்படம், ‘மெட்ராஸ் மேட்னி’. இதை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ளார். காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் கவர்ந்தது.
ராஜேஸ்வர் காளிசாமி: மணிகண்டன், சான்வி, ஆர்.சுந்தரராஜன், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவான ‘குடும்பஸ்தன்’, குடும்பங்களை தியேட்டருக்கு இழுத்து வந்த படம். இதை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். ஓர் இளைஞன் குடும்ப தலைவனாக மாறும்போது சந்திக்கும் பொருளாதார சிக்கலையும் குடும்பத்துக்குள் எழும் ஈகோவையும் எப்படி சமாளிக்கிறான் என்பதை நகைச்சுவையோடு சொன்ன படம் இது.
பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன்: ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜு ராஜப்பன் உள்பட பலர் நடித்துள்ள ‘எமகாதகி’ படம் மூலம் பெண்களுக்கு எதிரான சமூக கட்டமைப்புகளை சொல்லியிருந்தார் அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன். இப்படம் சமூக வலை தளங்களில் சில விவாதங்களையும் எழுப்பியது.
லோகேஷ் அஜில்ஸ்: சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்கும் புலன் விசாரணைப் படம்தான் ‘லெவன்’ என்றாலும் அதை சொன்னவிதத்தில் கவனம் ஈர்த்தார் லோகேஷ் அஜில்ஸ். நவீன் சந்திரா நடித்த இதில் ரியா ஹரி, அபிராமி, ஆடுகளம் நரேன், திலீபன், ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.