

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஒரு நாள் வேலை நிறுத்தம் நேற்று நடைபெற்றது. மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடிகர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் சம்பளத்தைப் பெற வேண்டும் என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்த கவனத்தை ஈர்க்க மே 2-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கம் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால், அறிவித்தபடி, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடித்த சுமார் 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. இதனால் பல கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்கம், “தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் நடிகர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று கடந்த 3 ஆண்டு காலமாக நடிகர் சங்கத்துக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் பலமுறை தெரிவித்துள்ளோம். அவர்கள் இதுநாள் வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். எனவே திரைத்துறையில் உள்ள அனைவரின் கவனத்துக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அடையாள வேலை நிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும், நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக திரைப்படம் தொடர்பான எந்த வேலைகளும் நேற்று நடைபெறவில்லை.