

இளையராஜாவின் மூத்த அண்ணனும், தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஜெயன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘ராஜாஸ் பிளே லிஸ்ட்’.
காதல் மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தை சுஜித் என் சுப்ரமணியம் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒளிப்பதிவாளர். இப்படத்தில் சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோம சுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய் முனீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
எலிபென்டைன் எக்ஸ் நிறுவனம் சார்பில் ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கிறார். தன் தம்பிக்காக இயக்குநர் வெங்கட் பிரபு, கதை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொடியூசராக இணைந்துள்ளார். இவர்கள் நட்புக்காக இணைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் கூறும்போது, “ஜெயனை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் சினிமாவில் ஓர் அழுத்தமான இசைத் தொடர்பான கதைகள் வந்து நீண்ட நாட்களாகி விட்டன. அந்த குறையை இப்படம் போக்கும்” என்றார்.