

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது.
படம் பற்றி நடிகர் அதர்வா முரளி கூறும்போது, “தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் ‘பராசக்தி’கதையையும் அதில் என் கதாபாத்திரம் குறித்தும் முதலில் சொன்னார்.
என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி. ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர்.
சினிமாவில் அவருடைய வளர்ச்சியை எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன்.
நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும்” என்றார்.