

சென்னை: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இந்தப் படம் எதிர்வரும் பொங்கல் விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
“பராசக்தி திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி அன்று முன்கூட்டியே ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள், படத்தை திரையிடும் திரைப்பட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளோம்” என படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
ஜனவரி 9-ம் தேதி அன்று விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் விதமாக இதுவே தனது கடைசி திரைப்படம் என விஜய் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.