

சென்னை: ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்ததால், ஒரு பவுன் ரூ.1,00,560 என உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கடந்த அக்.17-ம் தேதி ரூ.97,600 ஆக அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டது.
அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், டிச.12-ம் தேதி ரூ.98,960 ஆக உயர்ந்தது. 3 நாட்களுக்கு அதே விலை நீடித்த நிலையில், கடந்த 15-ம் தேதி பவுன் விலை ரூ.1 லட்சத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. அன்று ஒரு கிராம் விலை ரூ.12,515, ஒரு பவுன் விலை ரூ.1,00,120 ஆக இருந்தது.
அதன்பிறகு, சற்று குறைந்த விலை கடந்த சில நாட்களாக ரூ.99,000-ஐ ஒட்டியே இருந்தது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது. கடந்த 20-ம் தேதி ஒரு கிராம் ரூ.12,400, ஒரு பவுன் ரூ.99,200-க்கு விற்கப்பட்டது. 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதே விலையே நீடித்தது.
இந்நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.170 என பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.12,570, ஒரு பவுன் ரூ.1,00,560 என உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,719 ஆகவும், ஒரு பவுன் ரூ.1,09,752 ஆகவும் இருந்தது. வெள்ளி விலையும் நேற்று கணிசமாக உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.231 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ரூ.2.31 லட்சமாகவும் இருந்தது.