

நடிகர் ரஜினி காந்தின் 173-வது படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ஆர்.மகேந்திரன் இணை தயாரிப்பு செய்கிறார். இப்படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. கதை பிரச்சினை காரணமாக அவர் விலகியதை அடுத்து, சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
அவரும் விலகியதை அடுத்து ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குவதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: பேச அழைப்பதாகச் சொன்னாலே தயக்கமாக இருக்கிறது. ஏனென்றால் நான் பேசினாலே ‘பிராப்ளம்’தான். எனக்கும் பிரச்சினை, மற்றவர்களுக்கும் பிரச்சினை. ஏதாவது கிளப்பிக் கொண்டே இருப்பார்கள். நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேங்கிறார் என்பார்கள். வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா ? என கிண்டல் செய்வார்கள். சரி என்று பேசினால், ‘இப்போது வந்து பேசு’ என்று சிலரும், ‘இவர் பேசியிருக்கக் கூடாது’ என்று சிலரும் சொல்கிறார்கள்.
ரொம்ப நாள் கழித்து நான் தெரிந்துகொண்டது நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் பிடிக்காது. பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பேசினாலும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ‘சிவாஜி’ படத்துக்கு பிறகு ராஜ் கமல் நிறுவனத்துக்கு நான் ஒரு படம் செய்வதாக இருந்தது. அது தள்ளிப்போனது. இப்போது சேர்ந்துள்ளோம்.
இந்தப் படத்துக்கு அஸ்வத் மாரிமுத்து 4-வது இயக்குநர். முதலில் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவதாக இருந்தது. பின் சுந்தர். சி வந்தார். அவருக்கு வேறு படங்கள் இருந்ததால் தாமதமானது. சிபி சக்கரவர்த்தியின் கதை அருமையாக இருந்தது. கொஞ்சம் சென்சிட்டிவ். அந்தக் கதைக்கு நிறைய நாள் தேவைப்படும் என்பதால் பிறகு செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது தான் அஸ்வத் மாரிமுத்து உள்ளே வந்தார். ‘ரஜினி நான் கதை கேட்க மாட்டேன். எல்லாத்தையும் உங்களிடமே விட்டுவிட்டேன்’ என்று கமல் கூறிவிட்டார். எனக்கு டென்ஷனாகிவிட்டது. எல்லா பொறுப்பையும் என்னிடம் கொடுத்துவிட்டார். ஆனால் நான் தான் அவரை கட்டாயப்படுத்தி இந்தக் கதையைக் கேட்க வைத்தேன். அஸ்வத் மாரிமுத்துக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்தப் படம் நன்றாக வரும்.
எனக்கும் கமலுக்கும் இருக்கிற நட்பை எவ்வளவு சொன்னாலும் அது குறைவாகத்தான் இருக்கும். என் சினிமா கேரியரில் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ வெற்றியைத் தந்த படம். அதில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. அதில் நடிக்க இருந்தது ஜெய் கணேஷ் தான். கமல் தான் இதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநரிடம் பரிந்துரை செய்தார். கமலால் தான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. இதுபோல கமல் எனக்குச் செய்த உதவிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். பின்னர் முதல்வர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லையே என்று கேட்டதற்கு அவரிடம் தெரிவித்து விட்டேன் என்றார்.